திண்டுக்கல் சிட்டி மருத்துவமனை.
நான்கு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த திண்டுக்கல் சிட்டி தனியார் மருத்துவமனையில் நேற்று (12.12.2024 வியாழக்கிழமை) இரவு 09.45 மணியளவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இதுவரை ஒரு குழந்தை உள்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை 100 க்கும் அதிகமான நோயாளிகள் அங்கிருந்து மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டரில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் சிட்டி தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் உட்பட 20 க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் சிட்டி மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட நபர்களை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் ஒரு சிலர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று ஆண்கள் உட்பட ஐந்து பேர் மருத்துவமனை லிப்டில் சிக்கி கொண்டதாகவும் இதனால் மூச்சுத் திணறி இறந்திருக்க கூடும் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களின் பெயர் விவரம்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுருளி (வயது 50), சுப்புலட்சுமி (வயது 45), ; திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 50), அவரது மகன் மணிமுருகன் (வயது 28), ராஜசேகர் (வயது 35), இதைத் தவிர ஒரு குழந்தையும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளது. மேலும் உயிர் இழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
திண்டுக்கல் சிட்டி தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட செய்தி பரவியதும் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை குழுக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.என். பூங்கொடி, திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ஏ.பிரதீப், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
திண்டுக்கல் சிட்டி தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.
பொதுவாக எல்லோரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்கு செல்வார்கள். ஆனால், அந்த மருத்துவமனையிலேயே தீ விபதது ஏற்பட்டால் அவர்கள் எங்க போய் முறையிடுவார்கள்?!
மருத்துவமனை பாதுகாப்பு விஷயத்தில் அரசும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்களும் மிக கவனமாகவும்; விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரிய பாடம். ஏனென்றால் மனித உயிர்கள் மகத்தானது. ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர்கள் பிழைப்பதில்லை. இந்த துயர சம்பவமே இறுதியாக இருக்கட்டும்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
.