மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார்.

மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர், வேளாண் தொடர்பான பல்வேறு அமைப்புகள், விவசாய உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்டோர் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை எடுத்துரைத்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான், அனைத்து பரிந்துரைகளையும் தாங்கள் உரிய மதிப்பாய்வு செய்து நிதியமைச்சருக்கு தெரிவிப்பதாக கூறினார். மேலும், வேளாண் துறை தொடர்பான அனைவருடனும் தொடர்ந்து பேச்சு நடத்தவுள்ளதாக திரு சவுகான் கூறினார்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமும் உள்நாட்டில் ஒரு ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் பட்ஜெட் தொடர்பான முன்மொழிவுகளை விரைவில் நிதி அமைச்சகத்திற்கு வழங்க முடியும் என்றும் கூறினார். பல்வேறு பழைய திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக திரு சவுகான் மேலும் கூறினார். இன்று, விவசாயிகள், பிற அமைப்புகள், பல்வேறு தரப்பினர் வழங்கிய ஆலோசனைகள் முக்கியமானவை என்று அவர் தெரிவித்தார். வேளாண் துறையில் மதிப்புக் கூட்டுதல், வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்வோருக்கான வசதிகளை அதிகரித்தல், வேளாண் ஆராய்ச்சியை விரிவுபடுத்துதல், வேளாண் இடுபொருட்களின் விலை, தரத்தைக் கட்டுப்படுத்துதல், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்தல் போன்றவை குறித்து பல ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டார்.

Leave a Reply