தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக மக்களுக்கு தரமான பொருட்களை ரூ. 2,000 த்துடன் முன்னதாகவே தங்கு தடையின்றி வழங்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் காலத்தே தொகுப்புகளை வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் பச்சரிசி, வெல்லம், கரும்பு கொண்ட பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. மேலும் வேஷ்டி சேலையுடன் பணமும் கொடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம் பெற்றிருக்கும் என்பதற்கான அரசாணை வெளியானது. அதன் அடிப்படையில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ வெல்லம் மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படும்.

அந்த வகையில் சுமார் 2 கோடியே 20 லட்சம் குடும்பங்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம் பெறவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். காரணம் வடகிழக்குப் பருவமழையால் விவசாயிகள் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயப் பயிர்கள் வீணாகி, பொது மக்கள் உடமைகளை இழந்து மிகுந்த பொருளாதார சிரமத்தில் உள்ளனர்.

இச்சூழலில் விவசாயிகள், பொது மக்கள் என அனைவருக்கும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக பொருட்கள், இலவச வேட்டி, சேலை மற்றும் ரூ. 2,000 வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை சார்பில், பொது மக்கள் அனைவரும் பயன்படும் வகையில், பொங்கல் விழாவை முன்னிட்டு, மூன்று வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக பச்சரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சேலை ஆகியவற்றை தரமாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும்.

எனவே தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக மக்களுக்கு தரமான பொருட்களை முன்னதாகவே தங்கு தடையின்றி வழங்கவும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்…

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply