குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 1, 2025) புதுதில்லியில் 2025-ம் ஆண்டுக்கான புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், புத்தகங்கள் படிப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவம். பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களிலிருந்து வரும் புத்தகங்களைப் படிப்பது, பிராந்தியங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் பாலங்களை உருவாக்குகிறது. புதுதில்லி உலக புத்தகக் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மொழிகளையும், பிற நாடுகளின் மொழிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரங்குகள் இருப்பதைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார். இந்தப் புத்தகக் கண்காட்சி, புத்தக ஆர்வலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து இலக்கியங்களை ஒரே இடத்தில் பெற உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பதைத் தவிர, பள்ளிக் குழந்தைகள் பல்வேறு பாடங்களில் பல்வேறு வகையான புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார். இது அவர்களின் ஆற்றலையும் திறன்களையும் கண்டறியவும், நல்ல மனிதர்களாக மாறவும் உதவும் என்று அவர் கூறினார்.
குழந்தைகளுக்கான புத்தகங்களை உருவாக்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் அனைவரும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். நம் குழந்தைகளிடம் நாம் வளர்க்கக்கூடிய சிறந்த பழக்கங்களில் ஒன்று புத்தகம் படிப்பதில் ஆர்வம் என்று அவர் கூறினார். பெரியவர்கள் அதை ஒரு முக்கியமான கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
திவாஹர்