இந்திய தர நிர்ணய அமைவனம் தரப்படுத்தலில் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைந்து செயல்படுவதை வலுப்படுத்துகிறது.

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் தரப்படுத்தல் துறையில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இந்தியத் தர நிர்ணய அமைவனம் ஒரு உயர்மட்ட நிலையிலான விவாதத்தை நடத்தியது. இந்த நிகழ்வில் இந்தப் பிராந்தியங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதர்கள், பிரதிநிதிகள், வெளியுறவு அமைச்சக, நுகர்வோர் விவகாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் செயலாளர் திருமதி நிதி கரே, இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் தலைமை இயக்குநர் திரு. பிரமோத் குமார் திவாரி ஆகியோர் அமைவனத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களுக்குத் தலைமை தாங்கினர்.

நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்தை எளிதாக்கும் அதே வேளையில், தயாரிப்பின் தரம், பாதுகாப்பை உறுதி செய்யும் அமைவனத்தின் விரிவான தரநிலை சூழல் அமைப்பை நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் எடுத்துரைத்தார். சர்வதேச வர்த்தகம், தர உள்கட்டமைப்பை வலுப்படுத்த தரநிலைகளை இணக்கமாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

பொருந்தக்கூடிய தன்மை, பாதுகாப்பு, தரத்தை உறுதி செய்யும் தரநிலைகளை அமைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதில் இந்தியத் தர நிர்ணய அமைவனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று திருமதி கரே கூறினார்.

ஐடெக் திட்டத்தின் கீழ் வளரும் நாடுகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அமைவனம் எவ்வாறு ஏற்பாடு செய்து வருகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். இதுவரை, 30 ஆப்பிரிக்க நாடுகளும் 10 லத்தீன் அமெரிக்க நாடுகளும் இந்த முயற்சிகளால் பயனடைந்துள்ளன. அத்துடன் அறிவுப் பகிர்வு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் இந்திய தர நிர்ணய அமைவனம் இந்த நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply