இந்தியாவின் கார்பன் நீக்க முயற்சிகளை முன்னெடுப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்திய பெருநிறுவன விவகார நிறுவனம் (ஐஐசிஏ) மற்றும் இந்திய கார்பன் சந்தை சங்கம் (சிஎம்ஏஐ) ஆகியவை புதுதில்லியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பிப்ரவரி 4-ம் தேதி உலகளாவிய மற்றும் இந்திய கார்பன் சந்தைகள் குறித்த நிகழ்ச்சியின் தொடக்க நாளில் இந்த மைல்கல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கலந்து கொண்டார். அவர் இந்தியாவின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உயிரி எரிபொருள்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜனின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.
“அறிவை செல்வமாக மாற்றுவதே எதிர்காலம், எந்தப் பொருளும் வீண் அல்ல” என்பதை அவர் எடுத்துரைத்தார். பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதே வேளையில், “ஹைட்ரஜன் எதிர்காலத்திற்கான எரிபொருள்” என்றும் அவர் கூறினார். ஹைட்ரஜனின் விலை ஒரு கிலோவிற்கு 1 டாலராக இருக்க வேண்டும் என்ற தமது தொலைநோக்குப் பார்வையையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டார். இந்தத் துறையில் அதன் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் காரணமாக இந்தியா இதை அடைய முன்னோடி நாடாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். உயிரி எரிபொருள்கள் மற்றும் மாற்று எரிபொருட்கள் தொடர்பான மைல்கல் முயற்சிகளை மேற்கோள் காட்டிய அவர், மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தொடக்க நிலைச் செலவு அதிகமாகத் தோன்றினாலும், குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருவதாகவும், இது இறுதியில் அதன் உண்மையான திறனை வெளிப்படுத்த வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார். பன்முகப்படுத்தப்பட்ட உயிரி எரிபொருள் துறையை வளர்ப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மேலும் எடுத்துரைத்தார். பல்வேறு எரிபொருட்களின் பரந்த ஆற்றலை உருவாக்குவதிலும், ஒரு தூய்மையான, மிகவும் நிலையான எரிசக்தி நிலப்பரப்பை உருவாக்குவதிலும் விரைவில் இந்தியா ஒரு பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி நாடாக மாறும் என்று அவர் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா