பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார் அசாம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23 அன்று மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பிப்ரவரி 24 அன்று காலை 10 மணியளவில், போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, அவர் பீகாரின் பாகல்பூருக்குச் செல்கிறார். பிற்பகல் 2:15 மணியளவில், அவர் பிரதமரின் கிசான் திட்டத்தின் 19-வது தவணைத் தொகையை விடுவிக்கிறார். மேலும் பீகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். மேலும் அவர் குவஹாத்திக்குச் சென்று மாலை 6 மணியளவில், ஜுமோயர் பினாந்தினி (மெகா ஜுமோயர்) 2025 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். பிப்ரவரி 25 அன்று, காலை 10:45 மணிக்கு, குவஹாத்தியில் அட்வான்டேஜ் அசாம் 2.0 முதலீடு, உள்கட்டமைப்பு உச்சி மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் பிரதமர்
சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த சுகாதார சேவைகளை உறுதி செய்யும் வகையில், ரூ. 200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த புற்றுநோய் மருத்துவமனை, ஏழை புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சையை வழங்கும். மேலும் அதிநவீன இயந்திரங்கள், சிறப்பு மருத்துவர்களைக் கொண்டிருக்கும்.
போபாலில் நடைபெறும் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ-யும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மத்திய பிரதேசத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக நிறுவுவதற்கான ஒரு முக்கியமான தளமாக இந்த மாநாடு அமையும். மருந்து, மருத்துவ சாதனங்கள், போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, தொழில், திறன் மேம்பாடு, சுற்றுலா, குரு சிறு நடுத்தர நிறுவனங்கள் போன்றவற்றிற்கான அமர்வு, உலகளாவிய தெற்கு நாடுகளின் அமர்வு, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் அமர்வு போன்ற சர்வதேச அமர்வுகள், முக்கிய பங்குதாரர் நாடுகளுக்கான சிறப்பு அமர்வுகளும் இதில் அடங்கும்.
இந்த மாநாட்டின் போது 3 பெரிய தொழில் கண்காட்சிகள் நடைபெற உள்ளன. இதில் வாகனப் பிரிவில் மத்திய பிரதேசத்தின் வாகன திறன்கள், எதிர்கால போக்குவரத்துத் தீர்வுகள் காட்சிப்படுத்தப்படும். ஜவுளி, ஆடை அலங்காரக் கண்காட்சி பாரம்பரிய, நவீன ஜவுளி உற்பத்தியில் மாநிலத்தின் நிபுணத்துவத்தை எடுத்துரைக்கும். “ஒரு மாவட்டம்-ஒரு தயாரிப்பு” (ODOP) பிரிவு மாநிலத்தின் தனித்துவமான கைவினைத்திறன், கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்.
60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முக்கிய தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
எம்.பிரபாகரன்