முதலீட்டுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும், ஒழுங்குமுறை நிலைத்தன்மையை உறுதி செய்யவும், நாட்டில் எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இன்று (2025 ஜனவரி 24) மராத்தா வர்த்தக, தொழில்துறை மற்றும் வேளாண் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த புனே சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் தனது மெய்நிகர் உரையின் போது அமைச்சர் இதைத் தெரிவித்தார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அண்மைக்கால அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பயணங்கள் அதிக முதலீடு மற்றும் ஒத்துழைப்பு மேம்பட வழிவகுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார். 2 நாள் உச்சிமாநாடு வளர்ந்து வரும் வர்த்தகப் போக்குகளை ஆராய்ந்து, வலுவான கூட்டாண்மைகளை உருவாக்கி, வளர்ச்சியடைந்த இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மாற்றத்தக்க பங்கை எடுத்துக்காட்டுவதாக இருக்கும் என்று வலியுறுத்திய திரு கோயல், 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள் என்றும், இது இந்தியாவின் மீள்திறன் மீதான உலகளாவிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
‘கிழக்கின் டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படும் புனே புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்த நகரம் அனைத்து தொழில்களிலும் அளவுகோல்களை அமைத்து வருவதாகவும், ஒத்துழைப்புகளை வளர்க்கும் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக் கதையை முன்னெடுத்துச் செல்லும் நிகழ்வுகளை நடத்துவதற்கான சிறந்த இடமாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா