“அமைதி காக்கும் பெண் படையினர் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதிலும், தப்பிப்பிழைத்தவர்களுக்கு ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்குவதிலும் பங்களிப்பு செய்கின்றனர். அவர்களின் இருப்பும் செயல்களும் நிலையான அமைதியையும், பாதுகாப்பையும் உருவாக்குவதில் பாலின பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை நிரூபிக்கின்றன” என்று இன்று(2025 பிப்ரவரி 25) புதுதில்லியில் நடைபெற்ற ‘அமைதி காக்கும் பெண்கள் – உலகளாவிய தெற்கு கண்ணோட்டம்’ என்ற மாநாட்டில் நிறைவுரையாற்றிய பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தெரிவித்தார். அமைதி காக்கும் பணியில் பெண்களின் மாறிவரும் பங்களிப்பை ஆராய்வதற்கும் சவாலான பணிகளில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான உத்திகளில் ஒத்துழைக்கவும் இந்தியாவைச் சேர்ந்த அமைதி காக்கும் படையின் 35 பெண் வீரர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 35 பெண் வீரர்களை ஒன்றிணைக்கும் இரண்டு நாள் மாநாட்டை ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் மையத்தின் இந்தியப் பிரிவு ஏற்பாடு செய்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் 50-க்கும் மேற்பட்ட அமைதி காக்கும் பணிகளில் 70 ஆண்டுகளாக 2.9 லட்சம் வீரர்களை இந்தியா ஈடுபடுத்தியுள்ள நிலையில், அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இந்தியா பெருமை கொள்ளும் கூட்டாளி என்று பாதுகாப்பு இணையமைச்சர் எடுத்துரைத்தார். அமைதி காக்கும் பெண் படையினரின் பங்கேற்பு, அமைதி காக்கும் பணியில் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை வளர்க்கிறது என்றும், மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனித்துவமான தேவைகள் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.
பல்வேறு மோதல்கள் மற்றும் வளர்ந்து வரும் சவால்களுடன் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமையைச் சுட்டிக்காட்டிய திரு சஞ்சய் சேத், அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மையை அடைய உலகின் தெற்கு நாடுகளிடையே ஒற்றுமை அவசியம் என்றார். நாடுகள் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், கூட்டு ஞானத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட விருப்பங்களை உறுதியான முன்னேற்றமாக மாற்றுவதற்கான வளங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
மரியாதை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி, வளம் ஆகிய ஐந்து வழிகாட்டும் கொள்கைகள் மூலம் இந்தியா தனது உலகளாவிய ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் மீண்டும் இங்கு வலியுறுத்தினார். அனைத்து நாடுகளின் விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், நியாயமான, சமச்சீரான, உலக அமைப்பை வளர்ப்பதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை இந்தக் கோட்பாடுகள் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். “நமது முன்னுரிமைகள் மனிதனை மையமாகக் கொண்டதாகவும், பல பரிமாணங்கள் கொண்டதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும், வளர்ச்சியை உள்ளடக்கிய, சமமான மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
மாநாட்டின் முடிவில், உலக அமைதி மற்றும் பாதுகாப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் அமைதி காக்கும் பெண்களை திரு சஞ்சய் சேத் பாராட்டியதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் ராணுவத் துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி, அமைதி நடவடிக்கைகள் துறையின் தலைமை உதவிச் செயலாளர், திரு ஜீன்-பியர் லாக்ரோய்க்ஸ், உலகளாவிய தெற்கு நாடுகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பெண் அதிகாரிகள், மூத்த பிரமுகர்கள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திவாஹர்