வடக்கு மும்பையில் 15 சுய மறுசீரமைப்பு வீட்டுவசதி சங்கங்களுக்கு சாவி வழங்கும் விழாவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.

பிப்ரவரி 25, 2025 அன்று, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸுடன் சேர்ந்து, வடக்கு மும்பையில் உள்ள 15 சுய மறுசீரமைப்பு வீட்டுவசதி சங்கங்களுக்கான சாவிகளை வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், நகர்ப்புற மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மகாராஷ்டிரா அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளித்தார்.

வீடற்றவர்களுக்கும், அதே பகுதியில் தற்போது கச்சா வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உறுதியான வீடுகளை வழங்குவதில் அரசு முனைப்புடன் இருப்பதாக திரு. கோயல் தெரிவித்தார். இந்த முயற்சியானது குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதையும், குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நிலையான வீட்டுவசதியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

வடக்கு மும்பையின் வளர்ச்சி குறித்துப் பேசிய திரு. கோயல், சமீப காலமாக அந்தப் பகுதி குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு முன்னேற்றங்களைக் கண்டு வருவதாகக் குறிப்பிட்டார். மகத்தேன் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், மேற்கு கண்டிவலியில் 1000 படுக்கைகள் கொண்ட மற்றொரு மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது இப்பகுதியில் சுகாதார அணுகல் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடற்கரை சாலை (வொர்லி-பாந்த்ரா) வெர்சோவா வரை நீட்டிப்பு மற்றும் புதிய விமான நிலையத்தை அடல் சேது வழியாக இணைக்கும் உத்தேச கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை அமைச்சர் பாராட்டினார். மும்பையில் நெரிசலைக் குறைப்பதிலும் இணைப்பை மேம்படுத்துவதிலும் இந்தத் திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

முக்கியமான குடிமைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மகாராஷ்டிரா அரசின் முயற்சிகளையும் திரு. கோயல் பாராட்டினார். மழைக்காலங்களில் ஏற்படும் தொடர்ச்சியான சாலை சேதப் பிரச்சனை, சிமென்ட்-கான்கிரீட் சாலைகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் சமாளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். கூடுதலாக, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மாசுபடுத்தும் நீர்நிலைகளின் பிரச்சனை திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், கடலில் விடப்படுவதற்கு முன்பு முறையான கழிவுநீர் சுத்திகரிப்பை உறுதி செய்வதற்காக ரூ.26,000 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தந்தப் பகுதிகளில் சுய மறுசீரமைப்புத் திட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற முயற்சிகள் வடக்கு மும்பைக்கு ஒரு புதிய திசையை வழங்கும் என்றும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும், அதன் குடியிருப்பாளர்களுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நகர்ப்புற வளர்ச்சியில் தன்னிறைவை நோக்கிய ஒரு நடவடிக்கையாக இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளது என்றும், அனைவருக்கும் வீட்டுவசதியை அணுகக் கூடியதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்துகிறது என்றும் கூறி திரு கோயல் தமது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply