அட்வான்டேஜ் அசாம் 2.0-ல் அசாமின் உள்நாட்டு நீர்வழிகளை உருமாற்றுவதற்கான ரூ.4,800 கோடி திட்டத்தை அமைச்சர் சர்பானந்த சோனோவால் அறிவித்தார்.

குவஹாத்தியில் இன்று நடைபெற்ற அட்வான்டேஜ் அசாம் 2.0, முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சிமாநாட்டில் அசாமின் உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை உருமாற்றுவதற்காக ரூ.4,800 கோடிக்கும் அதிகமான முதலீட்டுத் திட்டத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அறிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்காக, மாநிலத்தின் நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்த முதலீடு பயன்படும் என அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான இந்தப் பயணத்தை முன்னெடுப்பதில் அசாம், வடகிழக்கு மாநிலங்களுடன் இணைந்து செயல்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் உள்நாட்டு நீர்வழிகள் மறுமலர்ச்சிக்குத் திட்டமிட்டுள்ளதால், தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர், இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார். குறிப்பாக அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆகியவற்றுடன், இந்த பிராந்தியத்தில், உள்நாட்டு நீர்வழிகள் வர்த்தகத்தின் முக்கிய வழியாகச் செயல்படுகின்றன. உலகளவில் எதிர்காலத்தில் அதிகம் பயன்படும் என்று கருதப்படும் உள்நாட்டு நீர்வழிகள், சரக்கு மற்றும் பயணிகளைக் கொண்டு செல்வதற்கான மிகவும் சிக்கனமான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையை வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.

 “அட்வாண்டேஜ் அஸ்ஸாம் எப்போதும் பிராந்தியத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டு வருகிறது, வணிக நிறுவனங்கள் தங்கள் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது. அசாமின் உள்நாட்டு நீர் வழிகளைச் செயல்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஹரித் நௌகா திட்டத்தின் கீழ் வழக்கமான கப்பல்களை பசுமை கப்பல்களாக மாற்றவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மாநிலத்தில் நதி சுற்றுலாவின் மகத்தான ஆற்றலைக் கருத்தில் கொண்டு, மென்மையான, வழக்கமான மற்றும் சாத்தியமான செயல்பாடுகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் நியாயமான பாதை உள்ளிட்ட ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம். கடலில் தூர்வாருவதில் அதன் வளமான அனுபவத்தைக் கவனத்தில் கொண்டு இந்தியத் தூர்வாரும் கழகம், இந்தியாவின் நதிகளிலும் தூர் வாருவதற்கான பணியை மேற்கொள்ளும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

குவஹாத்தி மற்றும் துப்ரியில் ரூ.315 கோடி மதிப்பீட்டில் நீர் மெட்ரோ சேவையை மேம்படுத்துவதாகவும் மத்திய அமைச்சர் அறிவித்தார். கொச்சி மெட்ரோ சேவையின் வெற்றியின் அடிப்படையில், இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ரூ.100 கோடி மதிப்பீட்டில் குவஹாத்தியில் ஒரு உலகத் தரம் வாய்ந்த கப்பல் முனையமும் கட்டப்படும் என்ற தகவலையும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அமர்வில், மத்திய அமைச்சருடன் அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அஸ்ஸாம் அரசின் கால்நடை பராமரிப்பு, கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் பொது சுகாதாரத் துறை அமைச்சர் கிருஷ்ணேந்து பால், உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் தலைவர் விஜய் குமார், சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் மற்றும் உள்கட்டமைப்பு, ரயில்வே மற்றும் கடல்சார் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பெருநிறுவனத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply