பல பத்தாண்டுகளுக்கு முன் மத்திய அரசு கிழக்கு நோக்கிய பார்வை என்ற கொள்கையை அறிமுகம் செய்தது. பிரதமர் திரு நரேந்திர மோடி அதனை, கிழக்கு நோக்கிய செயல்பாடு என மாற்றினார். ஏனெனில் வெறும் பார்வை மட்டும் போதுமானது அல்ல, செயல்பாடு அவசியம். செயல்பாடு நடைபெறும் போது குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாம் காண்கிறோம். விமானப் பயணம், விமான நிலையங்கள், ரயில்வே, சாலைப் போக்குவரத்து தொடர்பு, 4ஜி நெட்வொர்க் கிடைப்பது என அனைத்தும் அருணாசலப்பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கான குறியீடுகளாகும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இம்மாநிலத்தின் காம்லே மாவட்டத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டு மெகா நியோகும் யுல்லோ கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று கூடியிருந்தோரிடையே உரையாற்றிய திரு தன்கர், அருணாசலப்பிரதேசம் 50,000 மெகாவாட் மின் உற்பத்திக்கான திறனைப் பெற்றுள்ளது என்றார். ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.10 கோடி முதலீடு தேவைப்படும் என்பதால் அருணாசலப்பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி முதலீட்டுத் திறன் உள்ளது என்று பொருளாகும். இத்தகைய சூழலில் தாம் இந்த நிகழ்வில் பங்கேற்றிருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது என்று திரு தன்கர் தெரிவித்தார்.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக பௌத்த சமூகத்திற்கு சிறுபான்மையின அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது மற்றும் புத்தமதத் தலைவர் ஒருவருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு உலகம் முழுவதும் வலுவான செய்தியை கொண்டு சென்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் கலாச்சார ஒற்றுமை பற்றி எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், இந்தியாவைப் போல் வேறு எந்த நாடும் இல்லை என்றும், ஹோலி, பைசாகி, லோஹ்ரி, பிஹு, பொங்கல், நவன்னா போன்று நியோகும் யுல்லோ விழாவும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது என்றும் கூறினார். இந்தியாவில் நாம் எங்கே இருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. நமது சிந்தனைகளும் பாரம்பரியங்களும் ஒன்றிணைந்து இருக்கின்றன என்பதுதான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா இன்று வலுவான நாடாக உள்ளது. உலகின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக நமது பிரதமர் விளங்குகிறார். நல்வாய்ப்பாக நீங்கள் அனைவரும் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மத்திய அமைச்சரவையில், கிரண் ரிஜிஜூ மீண்டும் மீண்டும் இணைக்கப்படுவது அருணாசலப்பிரதேசத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்குச் சான்றாகும் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ-வின் பங்களிப்புகளுக்காக அவருக்குப் பாராட்டு தெரிவித்த திரு தன்கர், அருணாசலப்பிரதேசத்திற்கான அமைச்சரின் தொலைநோக்குப் பார்வை வெற்றி பெற்று குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரும் என்றார்.
மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, நியோகும் யுல்லோ விழாக்குழுவின் தலைவர் குச்சி சஞ்சய், உதவி பொதுச் செயலாளர் திரு ராப் கரா தானி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
திவாஹர்