சண்டிகரில் உள்ள சிஎஸ்ஐஆர் – ஐஎம்டெக், நிறுவனத்தின் ஆய்வு வசதிகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.

சண்டிகரில் உள்ள  சிஎஸ்ஐஆர் – ஐஎம்டெக் (நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம்)  நிறுவனத்தின் ஆய்வு வசதிகளை  மத்திய  அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஆய்வு செய்தார். இந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார்.

நுண்ணுயிர் தொழில்நுட்பமானது உயிரி தொழில்நுட்பத்தின் முக்கியமான தூண் என்றும் அடுத்த தலைமுறை தொழில்புரட்சியை வடிவமைக்க இதன் வளர்ச்சி முக்கியமானது என்றும் இந்த ஆய்வின் போது டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பத் துறை அதி வேகமாக வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், 2014-ம் ஆண்டு இந்தியாவில் உயிரிப் பொருளாதாரம் பத்து பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்றும் 2024-ல் இது 130 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது என்றும் கூறினார். 2030-க்குள் இதனை 300 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இமாசலப்பிரதேசத்தில் உள்ள பாலம்பூரில் சிஎஸ்ஐஆர் – ஐஎச்பிடி வளாகத்தில் (இமாலய உயிரி மூலவளத் தொழில்நுட்ப நிறுவனம்) புதிய ஆய்வு வசதிகளையும் பாலம்பூரில் துலிப் பூந்தோட்டத்தையும் காணொலிக் காட்சி மூலம் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். இதர பருவங்களில் கூட துலிப் பூச்செடிகளை பயிரிடும் வகையில், இந்த நிறுவனத்தின் அறிவியல் தலையீடு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த நிறுவனத்தின் ஆதரவுடன் வேளாண் புத்தொழில் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை அவர் வெளியிட்டார்.

சிஎஸ்ஐஆர் மலர் வளர்ப்பு இயக்கம் உட்பட பல்வேறு தேசிய இயக்கங்களுக்கு தலைமை ஏற்றதற்காகவும் இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், லடாக் ஆகியவற்றின் 3,800 விவசாயிகள் ரூ.80 கோடி வருவாய் ஈட்டும் வகையில், 1000 ஹெக்டேரில் மலர் வளர்ப்பை  விரிவுபடுத்தியதற்காகவும், சிஎஸ்ஐஆர் – ஐஎச்பிடி நிறுவனத்தை அமைச்சர் பாராட்டினார்.

ஃபைட்டோ பகுப்பாய்வு கூடத்துக்கு அடிக்கல் நாட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், மலர் வளர்ப்பு சந்திப்பு முதல் சந்த்பூர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பண்ணை வரை அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையையும் திறந்து வைத்தார்.

Leave a Reply