மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆயுஷ் அமைச்சகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் ஆயுஷ் மருத்துவ முறைகளின் கீழ் சுகாதார சேவைகளைப் பெற்றனர். மகா கும்பமேளாவின் போது பக்தர்களின் புனிதமான பயணத்தை பாதுகாப்பானதாகவும் ஆரோக்கியமாகவும் இது ஆக்கியுள்ளது.
20 ஆயுஷ் வெளிநோயாளிகள் பிரிவை அமைப்பது முதல், நடமாடும் சுகாதார பிரிவுகளை நிறுவுவது வரை, 90-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் 150 சுகாதாரப் பணியாளர்கள் இந்த மாபெரும் ஆன்மீக நிகழ்வு முழுவதும் தொடர்ச்சியான மருத்துவ சேவையை வழங்க அயராது உழைத்தனர். இந்த அர்ப்பணிப்பு முயற்சிகள் பக்தர்களும், துறவிகளும் உடல்நலன் குறித்த கவலைகள் இல்லாமல் புனித விழாக்களில் பங்கேற்பதை உறுதி செய்தது. குறிப்பாக புனித மகாசிவராத்திரி நீராடலின் போது இது உறுதி செய்யப்பட்டது.
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் ஆயுஷ் பொறுப்பு அதிகாரி டாக்டர் அகிலேஷ் குமார் சிங் பேசிய போது, எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களின் சுகாதாரத் தேவைகளை அமைச்சகம் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது என்றும், இது பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் மீது வளர்ந்து வரும் மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் நடத்திய யோகா அமர்வுகள் மூலமும் பக்தர்கள் பயனடைந்தனர். இது உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தார்.
திவாஹர்