தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.

காந்திநகரில் இன்று (பிப்ரவரி 28, 2025) நடைபெற்ற தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நீதி அமைப்பு நமது நாட்டில் சிறப்பாக உள்ளது என்றார். கடந்த சில ஆண்டுகளில், தடய அறிவியலின் பங்கை வலுப்படுத்தவும், இந்தத் துறையில் வசதிகள், திறன்களை மேம்படுத்தவும் அரசு பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு நீதி அமைப்பும் உண்மையிலேயே அனைவரையும் உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே அது வலிமையானதாகக் கருதப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும், குறிப்பாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான, விரைவான நீதியை வழங்குவதே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நாட்டின் நல்லாட்சிக்குத் தடயவியல் மாணவர்கள் தங்கள் பங்கினை ஆற்ற முன் வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் குற்றப் புலனாய்வு மற்றும் சாட்சியங்களா தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தண்டனைக் காலம் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருக்கும் வழக்குகளில், தடயவியல் நிபுணர் குற்றம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார். புதிய சட்டத்தின் படி, அனைத்து மாநிலங்களிலும் தடயவியல் வசதிகளைகா குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த மாற்றங்கள் தடய அறிவியல் நிபுணர்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அதிவேக மாற்றத்தின் காரணமாக, குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில், தடய அறிவியல் நிபுணர்களின் திறன்கள் அதிகரித்து வருவதாகவும், குடியரசுத் தலைவர் தெரிவித்தார். நமது காவல்துறையினர் குற்றவாளிகளை விட புத்திசாலித்தனமாகவும், விரைவாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பதன் மூலம் மட்டுமே குற்றங்களைக் கட்டுப்படுத்துவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் வெற்றி பெற முடியும் என்று அவர் கூறினார். தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன், ஒரு வலுவான தடயவியல் அமைப்பு உருவாக்கப்படும் என்றும், தண்டனை விகிதம் அதிகரிப்பதன் மூலம் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்ய பயப்படுவார்கள் என்றும் இதனால் குற்றங்கள் குறையும் என்றும் திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply