நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை:முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்!-வைகோ கோரிக்கை.

திருநெல்வேலி மாநகர், தொட்டிபாலத் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர்உசேன் பிஜிலி அவர்கள், நேற்று 18.03.2025 அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பட்டப் பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இவர் அப்பகுதியில் உள்ள முர்தீன் ஜஹான் தைக்கா பரம்பரை முத்தவல்லியாகவும் இருந்து வந்துள்ளார்.

இறப்பதற்கு முன்பு அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தாம் ஒரு கும்பலால் கொலை செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிட்டுள்ள கும்பல் ஒன்று தம்மை கொலை செய்யக் கூடும் என்றும், திருநெல்வேலி டவுண் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் இருவரும் தாம் கொலை செய்யப்படுவதை ஊக்குவிப்பதாகவும், மேற்கண்ட காவல்துறை அலுவலர்கள் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இக்காணொளி சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளில் காவல்துறை மிகவும் துரிதமாக செயல்பட்டு, குற்றச் செயல்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்திட முயற்சி மேற்கொண்டிருக்க வேண்டும். உரிய மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீவிர தடுப்பு நடவடிக்கையை எடுத்திருந்தால் இச்சம்பவம் நிகழாமல் தடுத்திருக்கலாம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், அப்பகுதி வாழ் மக்களும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இத்துயர நிகழ்வில் விழிப்புடன் இருந்து கடமையாற்றத் தவறியதாக கொலையுண்ட ஜாகிர்உசேன் பிஜிலியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநெல்வேலி டவுண் பகுதிக்கான காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, இடமாற்றம் செய்திட வேண்டும்.

சிறப்புப் புலனாய்வுப் படை அமைத்து, இக்கொலையிலும், இதற்குப் பின்னணியில் வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் சதிச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களையும் முழுமையாகக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply