இலங்கையில் சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன!

          சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கடந்தவாரம் 6 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார். 05.01.2013 நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: 
யாழ்ப்பாணத்தில் 5 முறைப்பாடுகளும் கிளிநொச்சியில் ஒரு முறைப்பாடும் பதிவாகியுள்ளன. மண்டைதீவில் 4வயதுச் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டுப் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். 
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. சம்பவ இடத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் எனக் கூறி நடமாடியவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். விசாரணைகளின் மூலமாக அவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் இல்லையென்பதும், குற்றச் செயலுடன் தொடர்பு படவில்லை என்பதும் தெரிய வந்தது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து வருகின்றனர்.

யாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்மவயதுச் சிறுமி அவரது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர் தற்போது வெளிமாவட்டத்தில் உள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்படுவார். 
யாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மற்றொரு பதின்மவயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். 
யாழ். நகரில் வைத்து 15 வயதுச் சிறுமியை அவரது பாதுகாவலர்களிடமிருந்து கடத்திச் சென்ற சம்பவம் கடந்த வாரம் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளின் மூலம் கடத்திச் சென்ற நபர் இனங்காணப்பட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குச் சென்ற பொலிஸார் அங்கு வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர். 
சிறுமியைக் கடத்திய நபரும் அந்த வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கிடையே காதல் தொடர்பு இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் பெண் பதின்ம வயதுச் சிறுமி என்பதால் அது சட்டத்துக்கு முரணானது என்ற அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 
பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்மவயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 27ஆம் திகதி சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
கிளிநொச்சியில் கடந்த ஏப்ரல் மாதம் பதின்மவயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்தவாரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். 
இதேபோல கிளிநொச்சி பஸ் நிலையப் பகுதியிலும் இளம் பெண்கள் மற்றும் மாணவிகள் செல்லும் போது பின் தொடர்ந்து செல்லும் சிலர் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்து சேஷ்டை புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
இதேவேளை கிளிநொச்சியில் சட்ட விரோத மதுப் பாவனையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் மாலையானதும் வயது, உறவு, தகுதி வேறுபாடின்றி பலரும் மது போதையில் தள்ளாடுவதையும், வீதியால் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவதையும் அசிங்கமான கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதனையும் அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தில் இதுநாள் வரையிலும் சிறுமிகள் மீதான 24 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன் தெரிவித்திருக்கின்றார். 
அதேவேளை பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக இந்தக் காலப்பகுதியில் 32 சம்பவங்கள் பற்றி முறையிடப்பட்டிருக்கின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 102 ஆக இருந்து, கடந்த வருடம் 182 ஆக அதிகரித்திருக்கின்றது. பாலியல் வன்புணர்வின் பின்னர் சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக டாக்டர் சிவரூபன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்முறைச் சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்று கடந்த 3 ஆம் திகதி நெடுந்தீவில் 12 வயதுடைய பூப்பெய்தாத சிறுமி ஒருவர் மிக மோசமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்”. 
இந்தச் சம்பவங்கள் சிறுமிகள் மீதான வன்முறைச் சம்பவங்களின் கொடூரத்தன்மை அதிகரித்துச் செல்வதைச் சுட்டிக்காடடுவதாக அமைந்திருக்கின்றன என்றும் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சிவரூபன் தெரிவித்திருக்கின்றார். இத்தகைய வன்முறைப் போக்கிற்கு மக்களிடையே அருகியுள்ள விழிப்புணர்வு, சிவில் நிர்வாகத்தில் காணப்படுகின்ற மென்மைப் போக்கு,ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகள் என்பன முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றது. அத்துடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் குற்றவாளிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும் என டாக்டர் சிவரூபன் குறிப்பிடுகின்றார் “சிறுமிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் தொடர்பாக பரபரப்பாகத் தகவல்கள் வெளியிடப்படுகின்ற அளவு வேகத்திற்கு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைப்பதாகத் தெரியவில்லை”.இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் நீண்டகாலம் எடுப்பதுவும் இத்தகைய குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.
அத்துடன் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பல குறைபாடுகள் நிறைந்திருப்பதாக டாக்டர் சிவரூபன் கருதுகின்றார்.நீண்டகால யுத்தம் ஒன்றில் பாதிக்கப்படுகின்ற சமூகத்தில் யுத்தம் முடிவடைந்ததும் பல்வேறு பிரச்சினைகள் எழுவது இயல்பு. எனவே எதிர்கொள்வதற்கு அந்தச் சமூகம் ஒருங்கிணைந்த முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகின்றார்.

வனிதாமணி

முகப்பு

Leave a Reply