கொழும்பில் இன்று (06.03.2013) நடைபெற இருந்த காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்குபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து செல்லவிருந்த மக்களை காவல்துறையினர் வவுனியாவில் தடுத்து வைத்தனர்.
யாழ்பபாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமடங்கு எண்ணிக்கையிலான குடும்ப உறவினர்கள் குறித்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அந்த மக்கள் இன்று (06.03.2013) காலை 10 மணியளவில் வவுனியாவிலேயே ஆர்ப்பாட்டத்தினை நடத்துவதற்கு தீர்மானித்து போராட்டமும் வவுனியா நகர சபை மைதானத்தில் நடத்தப்பட்டு மாவட்ட செயலகத்திற்கு மகஜர் கையளிக்க செல்லும் போது உள்ளே செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.
அதன்படி வெளியே வந்து மகஜரைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொண்டும் அரச அதிபர் வர மறுத்துவிட்டார்.
யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியாத மக்கள் மகஜரைக் பெற்றுக் கொள்ளும்வரை தாம் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என வீதிகளில் அமர்ந்து தமது போராட்டத்தினை முன்னெடுத்தமையால் ஏ 9 வீதி முற்றாக தடைப்பட்டது.
இறுதியாக மக்களது கோரிக்கைக்கு அடிபணிந்த மாவட்ட செயலகம் மேலதிக அரச அதிபரை அனுப்பியது. அதற்கமைய அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் , சிவசக்தி ஆனந்தன், விநோதரலிங்கம் ஆகியோருடனும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களுடனும் பேச்சுவார்ததையினை நடத்தியதுடன் மகஜரையும் பெற்றுக் கொண்டார்.