வாடிக்கையாளருக்கு அடகு வைத்த நகைக்கு பதிலாக கவரிங் நகையை கொடுத்து மோசடி செய்ததாக முத்தூட் மினி கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகிலுள்ள பேடர அல்லி என்ற ஊரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மோகன்.இவர் கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று, முத்தூட் மினி கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனத்தில் தனது 47.8 கிராம் எடையுள்ள தங்க செயினை, அடமானம் வைத்து 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று, அந்த நகைக்கான அடமான தொகையையும், வட்டியையும் செலுத்தி தனது செயினை மீட்டுள்ளார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு சென்று நகையை சோதித்து பார்த்த போது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த மோகன், அப்போதே, முத்தூட் நிறுவனத்திற்கு சென்று, இது குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு அங்கிருந்தவர்கள்,”தவறு நடந்துவிட்டது.உங்களது நகையை கூடிய விரைவில் திருப்பி தந்துவிடுகிறோம்” என்று கூறி அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.
இதை நம்பி மோகன், முத்தூட் நிறுவனத்திற்கு பலமுறை தனது நகையை கேட்டு நடையாய் நடந்திருக்கிறார்.ஆனால் முதலில் நகையை மாற்றி தருவதாக சொன்னவர்கள், பிறகு “நகையை தர முடியாது…உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்..!” என்று மிரட்டல் தொனியில் பேசினார்களாம்.
இதனையடுத்து மோகன் 07.03.2013 மாலை தர்மபுரி நகர பி-1 காவல் நிலையத்தில் முத்தூட் மினி கோல்டு நிறுவனம் மீது மோசடி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து முத்தூட் நிறுவனம் இது போன்ற புகார்களில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.