இலங்கை குறித்த ஐநா மனித உரிமை தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் ‘அமெரிக்க தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாத நிலையில் நாம் முடிவெடுக்க முடியாது’ என்று மழுப்பலாக பேசி வருகின்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தை கவனிக்கும் எல்லோருக்குமே அமெரிக்க தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று நன்றாகவே தெரியும்! உலகிற்கே தெரிந்த விடயம் இந்திய பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் தெரியாது என்று சொன்னால் அதற்காக இந்திய மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ஆனாலும், உண்மை அதுவல்ல. அமெரிக்க தீர்மானத்தில் உள்ள ‘இலங்கைக்கு இலேசாக வலிக்கும்’ வாசகங்களைக் கூட இந்தியா ஏற்க மறுக்கிறது என்பதே இதன் பின்னுள்ள கொடூரமான உண்மை. இலங்கைக்கு கொஞ்சமும் வலிக்காத வகையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று உலகநாடுகளுக்கு சமிக்ஞை அனுப்பும் வகையிலேயே இந்திய அரசு இப்போது நடந்து கொள்கிறது.
ராஜதந்திர மட்டங்களில் இன்னும் தீவிரமாக இலங்கையை ஆதரித்து இந்தியா பஞ்சாயத்தில் ஈடுபட்டிருக்கும் என்பது உறுதி. இதுதான் தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் லட்சணமா? அமெரிக்க தீர்மானம் கூறுவது என்ன? அமெரிக்க தீர்மானத்தின் முதல் வரைவு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி வெளியானது. அடுத்த வரைவு ஏழாம் தேதி வெளியாகியுள்ளது. இந்த தீர்மான நகல் இந்தியாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் தமிழர்கள் எதிர்பார்க்கும் அளவிலோ, உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் எதிர்பார்க்கும் அளவிலோ இல்லை. இலங்கை இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையையும் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பையும் தமிழர்கள் கோருகிறார்கள்.
இலங்கைப் போரின்போது பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் கோருகின்றன. இவை எதுவும் அமெரிக்க வரைவு தீர்மானத்தில் இல்லை.
ஆனாலும், 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் நிரைவேற்றப்பட்ட இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம் போல இந்த புதிய தீர்மானம் இல்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த தீமானத்தை விட ஒரு படி மேலாகவும் புதிய தீர்மானம் இருக்கிறது.
அமெரிக்க தீர்மான விவரம்:
உலக நாடுகளுக்கு 7.3.2013 அன்று அமெரிக்கா அளித்துள்ள தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:
1. இலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம் ஆகிய இரண்டுமே பன்னாட்டு சட்டங்களின் கீழான பொறுப்புகளை நிரைவேற்ற போதுமானவை அல்ல என்று இந்த தீர்மானம் கவலை தெரிவித்துள்ளது.
2. ஐநா மனித உரிமை ஆணையர் இலங்கை தொடர்பில் பிப்ரவரி 11 அன்று அளித்த அறிக்கையினை புதிய தீர்மானம் வரவேற்றுள்ளது. கூடவே சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற அவரது கோரிக்கயை கவனத்தில் கொள்வதாக இந்த தீர்மானம் கூறுகிறது.
3. மேற்கண்ட ஐநா மனித உரிமை ஆணையர் அறிக்கையில் இலங்கை அரசுக்கு 12 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.
4. இலங்கையில் போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த நியாயமான சுதந்திரமான விசாரணை வேண்டும் என்கிற கடந்த ஆண்டின் தீர்மானத்தில், “பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்பது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
5. ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்களுக்கு (Special Rapporteurs) இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு இலங்கை அரசு கட்டுப்பாடற்ற அனுமதி அளிக்க வேண்டும்.
6. ஐநா மனித உரிமைகள் ஆணையர் அவர்கள், இந்த தீர்மானத்தின் செயலாக்கம் தொடர்பில் இலங்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து 2013 செப்டம்பர் மாதம் கூடும் ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 24 ஆவது கூட்டத்தில் இடைக்கால அறிக்கையும் 2014 தொடக்கத்தில் கூடும் 25 ஆவது கூட்டத்தில் மற்றுமொரு முழு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும்.
அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப் போக செய்ய இந்தியா துடிப்பது ஏன்?
முதன் முறையாக “இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்” என்கிற கருத்து ஐநா தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தகைய ஒரு விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றாலும், அப்படி ஒரு கோரிக்கை உள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. இதற்கு முன்பு டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இதனைக் குறிப்பிட்டாலும், அந்த தீர்ப்பாயமே அரசு சாராத ஒரு குடிமக்கள் அமைப்புதான் என்பதால் அதற்கு சட்ட வலிமை இல்லை.
அடுத்ததாக, ஐநா பொதுச்செயலர் அமைத்த இரண்டு குழுக்கள் இதனைச் சுட்டிக்காட்டினாலும் – அந்த அறிக்கைகள் ஐநா பாதுகாப்பு அவையிலோ, மனித உரிமைகள் அவையிலோ சமர்ப்பிக்கப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. அவற்றின் மீது ஐநா நடவடிக்கை எதுவும் இல்லை. “இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும்” என்பது நவநீதம் பிள்ளை அவர்கள் மார்ச் 20 அன்று சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில்தான் அதிகாரப்பூர்வமாக இடம் பெறும். இது தீர்மானத்திலும் இடம் பெறுவது முக்கியமானதாகும்.
ஐநா மனித உரிமை சிறப்பு விசாரணை வல்லுநர்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்பதும் முக்கியமானது. சுமார் ஆறு குழுக்கள் சென்று அவர்களது அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளியாகும் நிலையில் அது உலக அரங்கில் இலங்கையை மேலும் அம்பலப்படுத்துவது உறுதி.
“பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” எனும் புதிய வாசகத்துக்குள் எதை வேண்டுமானாலும் கொண்டுவர முடியும்.
அடுத்த ஆறு மாதத்தில் ஒரு இடைக்கால அறிக்கையும், ஒரு வருடத்தில் முழு அறிக்கையும் மனித உரிமைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் – ஐ.நா மனித உரிமைகள் விவாதத்தில் இலங்கை நிரந்தரமாக இடம் பிடிக்கும்.
இலங்கையிடம் அளவுகடந்த காதல் கொண்டுள்ள இந்தியா இதையெல்லாம் ஏற்பது கடினம்தான். 47 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐநா மனித உரிமைகள் குழுவில் இலங்கையை எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாடுகளான கியூபா, சீனா, ரசியா ஆகிய நாடுகளின் பதவிக்காலம் 2012 ஆம் ஆண்டில் முடிந்துவிட்டது. அவை இப்போது ஐநா மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர்களாக இல்லை. இலங்கையும் அதில் உறுப்பினராக இல்லை.
இப்போது ஐநா மனித உரிமைக் குழுவில் எஞ்சியுள்ள இலங்கையின் ஒரே தீவிர ஆதரவு நாடு இந்தியா மட்டும்தான். அமெரிக்க தீர்மானம் மார்ச் 21 அல்லது 22 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரக்கூடும். கடந்த ஆண்டு 24 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்தன. இந்த ஆண்டு அதைவிட அதிகமான நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும். இதனால் சர்வதேச அரங்கில் இலங்கை இன்னும் தனிமைப்பட்டு போகும்.
மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவு மிகக் குறைவு என்பதனால் புதிய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
ஆனால், “இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கயை கவனத்தில் கொள்வதாக” கூறும் தீர்மானத்தை இலங்கை எப்படி தானாக ஏற்கும்? ஏற்றுக்கொண்டால் உள்நாட்டில் அவமானம், ஏற்காவிட்டாலும் தீர்மானம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்கிற இக்கட்டான நிலை இலங்கைக்கு.
தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கைக்கு வலிக்கும். ஆதரிக்காவிட்டாலும் தீர்மானம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும் என்கிற இக்கட்டான நிலை இந்தியாவுக்கு. அதனால்தான் ‘இலங்கைக்கு வலிக்காத மாதிரி தீர்மானத்தை மாற்றுங்கள்’ என்று கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளது இந்தியா? தமிழ்நாட்டு தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது.