இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்காக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் நேற்று (08.03.2013) சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்திய அரசு குழப்பமற்ற ஒரு தெளிவான தீர்மானத்தை ஐ.நா.வில் முன்மொழிய வேண்டும். சர்வதேச விசாரணைக் குழுவில் ஆசிய நாடுகள் இடம்பெறக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திலிபன், பிரிட்டோ, தமிழ்மாறன் உள்ளிட்ட மாணவர்கள் லயோலா கல்லூரி அருகில் உண்ணாவிரதம் இருந்தனர்.
1.திலீபன் வயது 20 இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு
2.ஜோப் பிரிட்டோ வயது 20 இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு
3.அந்தோணி சாஜ் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
4.பார்வைதாசன் வயது 20 இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு
5.பால் கென்னத் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
6.மணி வயது 19 இளம் சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு
7.சண்முகப் பிரியன் வயது 19 இளம் வணிகவியல் இரண்டாம் ஆண்டு
8.லியோ ஸ்டாலின் வயது 20 இளம் கணிதம் மூன்றாம் ஆண்டு
அங்கு தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் இரவு 9.30 மணியளவில் மாணவர்கள் போராட்ட இடத்தை மாற்றினார்கள்.
கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 2-வது நாளாக நீடித்த மாணவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று (09.03.2013) காலை உண்ணாவிரத பந்தலுக்கு வந்து மாணவர்களின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். உங்களின் போராட்டத்திற்கு தேவையான உதவிகளை ம.தி.மு.க. செய்யத் தயாராக இருப்பதாக அவர் அவர்களிடம் தெரிவித்தார்.