காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது 30 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் 22 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
காவிரி நீர் பிரச்சினைக்காக சுப்ரீம் கோர்ட்டு வரை போராடி தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்து வெற்றி பெற்ற, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று (09.03.2013) பாராட்டு விழா சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக சரபோஜி கல்லூரி மைதானத்தில் 2 லட்சம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது.
தஞ்சையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் விவசாயிகள் சங்கம் சார்பில் பொன்னியின் செல்வி சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா வருகையொட்டி தஞ்சை நகரம் விழாக்கோலமாக காட்சியளித்தது. நகர் முழுவதும் அலங்கார தோரண வாயில்கள், பிரமாண்ட கட்- அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டன. இன்று காலை முதலே காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்ளில் இருந்து விவசாயிகள் தஞ்சையில் குவிய தொடங்கினர்.
விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–
தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமை பிரச்சனையாக விளங்கி வரும் பல்வேறு நதிநீர் பிரச்சினைகளில் காவிரி நதிநீர் பிரச்சினை மிக முக்கியமானதாகும். சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1892 மற்றும் 1924–ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், காவிரியில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. காவிரியில் நமக்குள்ள உரிமையை நிலை நாட்டுவதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று வழங்கியது. அப்போது தமிழ்நாட்டின் முதல்–அமைச்சராக இருந்தவர் மு.கருணாநிதி. மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு தான். ஆனால், இந்த இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட எவ்வித நடவடிக்கையையும் அந்நாள் முதலமைச்சர் கருணாநிதி எடுக்கவில்லை.ஆனால், இந்த இறுதி ஆணை வழங்கப்பட்டது முதல் இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும்; தமிழகத்திற்கு பாதகமாக உள்ள ஒரு சில அம்சங்களை உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
மூன்றாவது முறையாக 2011–ல் நான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் எனது உத்தரவின் பேரில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக எனது தலைமையில் பல ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து, பல முறை வழக்கறிஞர்களுடன் நான் விவாதித்தேன். தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தங்கள் பணியை திறம்பட செய்தனர்.இவற்றின் விளைவாக, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையினை 20.2.2013–க்குள் மத்திய அரசிதழில் வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 19.2.2013 தேதியிட்ட மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியிடப்பட்டது. இதுமட்டுமல்லாமல், தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகம் வழங்காத சூழ்நிலையில், தொடர்ந்து உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு குழு ஆகியவற்றை வலியுறுத்தியதன் பேரில் சுமார் 68 டி.எம்.சி. அடி நீரை கர்நாடக அரசை கட்டாயப்படுத்தி நாம் பெற முடிந்தது.
சுயநலமின்றி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நான் செயல்பட்டேன். அதில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.நாம் எவ்வளவு மன்றாடி கேட்டும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட மத்திய அரசு முன்வரவில்லை. எனவே இதனை வெளியிட வேண்டும் என்று, மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்ய நான் உத்தரவிட்டேன். இவ்வாறு பல விஷயங்களில், கர்நாடகம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக வழக்குகள் தொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். நமது உரிமைகளை, நீதிமன்றங்கள் மூலம் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்த நிலைமை விரைவில் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த போது, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட கருணாநிதி நடவடிக்கை எடுத்திருந்தால், இன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டிருக்கும். நமக்கு உரிய நீரை நாம் பெற்றிருக்க முடியும்.
நான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெறும் நிலை இருந்தபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரத பிரதமரை இது குறித்து சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சொன்னார்களா? அல்லது வெளியிட வேண்டாம் என்று சொன்னார்களா? என்பது தெரியவில்லை. ஆனால், எழுத்து பூர்வமாக எதையும் அளிக்கவில்லை. இந்த சந்திப்பின் மர்மம் என்ன என்பதை கருணாநிதி தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இவர்கள் சந்தித்ததாலோ என்னவோ, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர், மீண்டும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தான், மத்திய அரசு வேறு வழியில்லாமல் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டது. ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, ‘‘உச்ச நீதிமன்றமே, தானே முன் வந்து பிறப்பித்த உத்தரவுக்காக ஜெயலலிதாவுக்கு பாராட்டு என்கிறார்கள்…’’, என்று தனக்குள் இருக்கும் பொறாமை உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எனது தலைமையிலான தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்ற விவரத்தை இந்த தருணத்தில் கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
காவிரியில் போதிய அளவு தண்ணீரை கர்நாடகம் திறந்து விடாததன் காரணமாகவும்; பருவமழை பொய்த்ததன் காரணமாகவும் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 15,000 ரூபாய் நிவாரணம் வழங்கி இருக்கிறோம். 50 விழுக்காட்டிற்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு, இந்த தொகை அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. 3,06,794 விவசாயிகளுக்கு, 524 கோடியே 36 லட்சம் ரூபாய் அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
50 விழுக்காட்டிற்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு, 15,000 ரூபாய் இன்றைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்றால், இதில் தமிழக அரசு வழங்கியது எவ்வளவு? பேரிடர் நிவாரணத்தொகை எவ்வளவு? காப்பீட்டு நிறுவனம் வழங்கியது எவ்வளவு? என்றெல்லாம் கருணாநிதி வினா எழுப்பியுள்ளார். நிவாரண உதவிகளை நான் 8.2.2013 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த போதே, இது பற்றி தெளிவாக கூறியுள்ளேன்.
நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரத பிரதமரை நான் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பது மத்திய அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. எனவே, சட்டப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில், உங்களின் ஆதரவுடன் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொள்வேன். காவிரியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டி, தமிழகத்திற்குரிய பங்கினை பெற்றுத்தருவேன் என்பதை தெரிவித்துக்கொண்டு, இந்த நன்றி தெரிவிக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த விவசாய சங்கங்கள் அனைத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் பொது வாழ்விற்கு வந்து 31 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 31 ஆண்டுகளில் உண்மையான மன நிறைவை அளிக்கும் விழா இன்று நடைபெற்று கொண்டு இருக்கும் இந்த விழா என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த மேடையில் எனக்கு பாராட்டு தெரிவித்து என்னை வாழ்த்தி பேசிய பெரியவர்கள் குறிப்பாக அன்பு சகோதரர் தா.பாண்டியன் பேசியதையும், பெரியவர் காவேரி சீ.ரெங்கநாதன் பேசியதையும், எம்.ராஜேந்திரன், சத்யநாராயணன், பயரி கிருஷ்ணமணி, உழவர் பாண்டுரங்கன், ராஜாராம், திருவையாறு நவரோஜி சோழகர் ஆகியோர் பேசிய வார்த்தைகளையும் என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. எத்தனையோ பேர் பாராட்டு தெரிவிப்பார்கள். அவையெல்லாம் உதட்டளவிலான பாராட்டுகள். இன்று என்னை வாழ்த்தியவர்களின் வார்த்தைகள் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வந்தது என்பதை என்னால் உணர முடிந்தது என்பதை தெரிவித்துக்கொண்டு, தமிழக மக்கள், குறிப்பாக விவசாய பெருங்குடி மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் நடந்து கொள்வேன் என்ற உத்தரவாதத்தினை அளித்து அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
தஞ்சையிலிருந்து: கே.பி.சுகுமார், கோ.லெஷ்மிநாராயணன்