இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் : தமிழ் பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்

valampuri_journalistவலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் உ.சாளின் 08.03.2013 அன்று இனந்தெரியாதோரால் மிலேசத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். இவர் மீதான மிலேச்சத்தனமான – காட்டுமிராண்டித்தனமான – தாக்குதலை சுதந்திர ஊடகக் குரல் வன்மையாகக் கண்டிக்கின்றது. இவர் மீதான தாக்குதலுடன் யாழ். மாவட்டத்தில் ஊடகங்கள் மீது இந்த வருடத்தில் இடம் பெற்ற மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவென்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்ற அதே நேரத்தில் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாதது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.

யாழ். குடாநாட்டில் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலின் ஆகப் பிந்திய காடைத்தனமான தாக்குதலாக சாளின் மீதான தாக்குதல் அமைந்துள்ளது. யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது இந்த வருட ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே குரல் கொடுக்கும் சிவில் சமூகங்களையும் ஒடுக்கியுள்ள நிலையில் மக்களின் குரலாக இன்னமும் ஒலித்துக் கொண்டிருப்பது ஊடகங்களே. அதனால் அந்த ஊடகங்களையும் மௌனிக்க செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி உதயன் பத்திரிகையின் விநியோக ஊழியர் தாக்கப்பட்டதுடன் அவர் கொண்டு சென்ற பத்திரிகைப் பிரதிகளும் மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அந்தச் சம்பவம் இடம் பெற்று ஒரு மாத காலத்தினுள் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையின் விநியோக ஊழியர் தாக்கப்பட்டதுடன் அவர் கொண்டு சென்ற பத்திரிகைப் பிரதிகளும், மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வலம்புரிச் செய்தியாளர் மீது  இனந்தெரியாதவர்களின்  கைவரிசை மீண்டும் காட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக யாழ். ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலுக்கு எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு இலங்கை அரசும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுபவர்களும் உடந்தையாக இருக்கின்றனரா என்ற சந்தேகமும் தோன்றியுள்ளது. எழுந்துள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் செயற்படாது தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை இனியாவது கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு சுதந்திர ஊடகக்குரல் கேட்டுக் கொள்கின்றது.

Media.3.pmd

  

Leave a Reply