ராஜபக்சேவை கண்டித்து மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று (11.03,2013) ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் மற்றும் இன அழிப்புக்கு காரணமான ராஜபக்சே மீதும், இலங்கை அரசு மீதும் பன்னாட்டு போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசு இலங்கை அரசுடன் வைத்திருக்கும் அனைத்து உறவுகளையும் நிறுத்த வேண்டும்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் நடைபெற்று வருகிறது.
ராஜபக்சேவை தூக்கில் இடக்கோரி இன்று காலை (11.03,2013) மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2,500 பேர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பின்னர் கல்லூரி வளாகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநில துணைச் செயலாளர் துரைஅருள்ராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், கல்லூரி மாணவர்கள் வினோத் குமார், மணிக்கண்டன், குருசேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுமார் 1 மணி நேரம் இப்போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. சமீபத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, ராஜபக்சேவை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மை போராட்டத்தின் போது எரிக்கப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை தனியார் கல்லூரி மற்றும் பூம்புகாரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.