இந்தியாவில் அலைபேசி சேவைகளை வழங்கி வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் அளிக்கும் வசிப்பிட ஆதாரம் குறித்த ஆவணங்களை முறையாக பரிசீலிக்காமல் மனம்போன போக்கில் சிம்கார்டுகளை விற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக மறுத்தன. கே.ஒய்.சி. எனப்படும் உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துக்கொள்ளுங்கள் என்னும் மேற்கோளின்படியே சிம்கார்டுகள் விற்கப்படுகிறது என அவை கருத்து கூறி வந்தன.
இந்நிலையில், ஒரு ஆங்கில செய்தி நிறுவனம், முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் மற்றும் புலனாய்வு துறை இயக்குனர் ஆகியோர் பெயர்களில் எவ்வித வசிப்பிட ஆதார ஆவணத்தையும் வழங்காமல் ஒரு ‘போஸ்ட்-பெய்ட்’ மற்றும் ‘பீரி-பெய்ட்’ சிம் கார்டுகளை வாங்கியது.
அவர்களின் முகவரிக்கு சென்று சிம் கார்டை வாங்கியவர் சமர்ப்பித்துள்ள தகவல்கள் சரிதானா? என்பதை ஆய்வு செய்யாமலேயே சிம் கார்டுகளை விற்ற நிறுவனங்கள் 2 சிம் கார்டுகளுக்குமே இணைப்பையும் வழங்கியது.
தகுந்த ஆதாரங்களை வழங்காத நபர்களுக்கு சிம் கார்டுகளை விற்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் ஒரு கார்டு விற்பனைக்கு ஆயிரம் ரூபாயை மட்டுமே அபராதமாக விதித்து வந்தது.
ஆனால், நாளடைவில் இதைப்போன்ற முறைகேடுகள் பெருகியதால் தீவிரவாதிகளும், சமூக விரோதிகளும் போலி ஆவணங்களை அளித்து சிம் கார்டுகளை வாங்கும் செயல் அதிகரித்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து அபராதத் தொகையை அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் என தொலைத் தொடர்புத்துறை அதிரடியாக உயர்த்தியது.
இவ்வகையில், கடந்த 2007-ம் ஆண்டிலிருந்த 2012 வரை போலியான வசிப்பிட ஆவணங்களை ஆதாரமாக ஏற்று 19 லட்சம் சிம்கார்டுகளை முறைகேடாக விற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.2,800 கோடி அபராதம் விதித்து தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.