கர்நாடகத்தின் காவிரி நீர் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று, காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிக்கு எழுதிய கடிதத்தில், கடந்த பிப்.22ம் தேதி நான் ஏற்கெனவே எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறைக் குழுவையும் உடனே அமைக்க வேண்டும் என எழுதியிருந்தேன். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை அமல்படுத்த உடனடியாக இவை அமைக்கப்பட வேண்டும்.
கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 நீர்ப்பிடிப்பு அணைப்பகுதியில் பெறப்படும் நீரை வெளியேற்றுவதை நிறுத்தும் போக்கை மேற்கொண்டுள்ளது. சாதாரணமாக இந்தக் காலகட்டத்தில் பெறப்படும் நீரை அணைகளில் ஏப்ரல் 3 வது வாரத்தில் இருந்துதான் அது தேக்கி வைத்துக் கொள்ளும். இது கடந்த காலத்தில் நடைபெற்றுவரும் ஒன்று. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் படி குறிப்பிடப்பட்டிருக்கும் அளவு நீரை வெளியேற்றுவதைப் பற்றி எண்ணாமல், தனது கோடைக்காலத் தேவையை சந்திப்பதற்காக முன்னமேயே அது நீரை அணைகளில் சேமித்துக் கொள்கிறது. அதன் பின்னர் ஜூன் 1 முதல் ஜனவரி 31 வரை பாசனத்துக்காக நீரை திறந்துவிட வேண்டும். கோடைக்காலத் தேவையைக் காரணம் காட்டி முன்னமேயே நீரை தேக்கிவைக்கும் போக்கை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகத்தின் நீர் பயன்பாட்டுப் போக்கை கண்காணிக்க வேண்டிய அவசியம் இதனால் எழுகிறது. எனவே, வரும் 2013 மே முதல் வாரம் முதல் கர்நாடகத்தின் நீர்ப் பயன்பாட்டை கண்காணிக்க குழு அமைக்கப் படவேண்டும். அதன்மூலம் 2013-2014ம் ஆண்டுக் காலத்தின் தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக அமையும்.
இத்தகைய சூழ்நிலையில், காவிரி ஒழுங்குமுறைக் குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றை உடனடியாக அமைத்து, மத்திய அரசிதழில் வெளியிட்டபடி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா.குறிப்பிட்டுள்ளார்.