தென்பெண்ணை ஆற்று நீரை திருட கர்நாடகா திட்டம்!

      thenpennai.1jpgwater disputeதமிழகத்தின் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்று நீரை தரைமட்ட தொட்டியில் நிரப்பி, மோட்டார் மூலம் உறிஞ்சி ஏரிகளை நிரப்ப  கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 5 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்று நீர் தட்டக்கல், மாதேப்பள்ளி, முகுலூர் வழியாக தமிழகத்தின் கொடியாலம்  அணைக்கு வந்து அங்கிருந்து ஒசூர் அருகேயுள்ள பாகலூர் வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. இந்த அணை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது. 

ஆண்டுதோறும் பாசனத்துக்காக இந்த அணையில் தண்ணீர் திறக்கப்படும். கெலவரப்பள்ளி அணை நீர்மட்டத்தை பொருத்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி  அணைக்கு தண்ணீர் திறக்கப்படும். அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு சென்று அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வழியாக  கடலூர் மாவட்டம் சென்று கடலில் கலக்கிறது.

தமிழகத்தில் இந்த ஆறு 360 கி.மீ. பாய்ந்தோடுகிறது. இதன்மூலம் மொத்தம் 43 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன  வசதி பெறுகிறது. வற்றாத ஜீவநதியாக விளங்கும் தென்பெண்ணை ஆற்று நீருக்கு தற்போது திடீர் சோதனை வந்துள்ளது. ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்று நீரை கர்நாடக  மாநிலம் முகுலூர் பகுதியில் மின்மோட்டார் மூலம் உறிஞ்சி, அங்குள்ள 50க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்ப கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக கர்நாடக  மாநிலம் முகுலூரில் தண்ணீர் தொட்டி அமைத்துள்ளது. தென்பெண்ணை ஆற்று நீரை பம்பிங் செய்து, தரைமட்ட கீழ் தொட்டியில் நிரப்புகிறது. அங்கிருந்து 12  கி.மீ. தொலைவில் உள்ள லக்கூர் ஏரியை நிரப்பி அதன் மூலம் அங்குள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கர்நாடக அரசு நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் துவக்க விழா முகுலூரில் 11.03.2013 மாவாசை அன்று நடந்திருக்கிறது. இப்பணிகள் முடிந்தால், தமிழகத்துக்கு வர வேண்டிய தென் பெண்ணை ஆற்று நீர் பெருமளவு குறையும் என விவசாயிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

           

Leave a Reply