பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ‘குர்ரம்’ என அழைக்கப்படும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். பஞ்சாப் மாவட்டம், மியான்வலி பகுதியை சேர்ந்தவர் நூர்தீன். இவர் பரச்சினர் என்ற இடத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வந்தார். அங்கு நூர்தீனுக்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளத் தொடர்பாக மாறியது. இது உள்ளூர்வாசிகளுக்கு தெரிய வந்தது. எனவே அவரை அங்கிருந்து பணிமாற்றம் செய்ய வேண்டும் என போராடினார்கள். இதனையடுத்து அவர் வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். என்றாலும், அந்த பெண்ணை அவர் ரகசியமாக சந்தித்து பழகி வந்தார். நேற்று முன் தினம் மாலை, அந்த பெண்ணை தன்னுடன் அழைத்து செல்வதற்காக பரச்சினருக்கு வந்த நூர்தீனை பெண்ணின் உறவினர்கள் ஒரு அறைக்குள் பூட்டி வைத்து ‘ஜிர்கா’ எனப்படும் கிராம பஞ்சாயத்தினருக்கு தகவல் அளித்தனர்.
கள்ளத்தொடர்பு வைத்திருந்த இருவரையும் சாகும் வரை கல்லால் அடித்து கொல்லுமாறு ஜிர்கா தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து, பரச்சினர் பகுதியில் உள்ள ஒரு மயானத்தின் அருகே கண்கள் கட்டப்பட்ட நிலையில் நூர்தீன் வெட்டவெளியில் நிறுத்தப்பட்டார். அவர் மீது 300-க்கும் மேற்பட்டவர்கள் கற்களை எறிந்துக் கொன்றுள்ளனர். அவருடன் தனிமையில் இருந்த பெண்ணின் கதி என்னவாயிற்று? என்பது குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை.