காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தரக் கூறியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்தில் வடக்கு கிழக்கு காணாமல் போன உறவுகளைத் தேடும் சங்கத்தின் பிரதிநிதிகளால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு காணாமல் போன உறவுகளைத் தேடும் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவிருந்தது. அதற்கென வடக்கிலிருந்து பொதுமக்கள் பயணித்த சமயம் வவுனியாவில் வைத்து பொலிசாரால் பாதுகாப்பைக் காரணம் காட்டி வவுனியாவில் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அம்மக்கள் வவுனியாவில் தமது போராட்டத்தை ஆரம்பித்தனர். மிகுந்த எழுச்சியுடன் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் வவுனியா மாவட்டச் செயலருக்கு மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
இந்நிலையில் அன்று கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு ஐ.நாவுக்கு மகஜர் கையளிக்க முடியாது போனமை காரணமாக இன்று அம் மகஜரைக் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பாதுகாப்பு காரணமாக வடக்கு கிழக்கு காணாமல் போன உறவுகளைத் தேடும் சங்கத்தின் பிரதிநிதிகளில் ஒரு தொகுதியினரே மகஜர் கையளிப்புக்கு வருகை தந்திருந்தனர்.
அவர்கள் 13.03.2013 மதியம் 12.30 மணியளவில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்ட அலுவலகத்தில் அவ் அமைப்பின் பிரதிநிதியான பற்றிக் இவான்ஸிடம் கையளித்தனர்.
மகஜர் கையளிக்கும் இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோர் உட்பட மன்னார் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு கிழக்கு காணாமல் போன உறவுகளைத் தேடும் சங்கத்தினரும் நூற்றுக்கணக்கான உறவினர்களும் கலந்துகொண்டனர்.