இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்களை திருடியதன் மூலம், இந்தியா மீது, “சைபர்’ தாக்குதலை, சீன அரசு நடத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக தகவல்களைத் திருடும், “ஹேக்கர்ஸ்’ என்று அழைக்கப்படும் திருட்டுக் கும்பல் மூலம், இந்திய ராணுவ ரகசியங்களை சீனா திருடியது தெரிய வந்துள்ளது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும், இந்தியாவின், தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன கம்ப்யூட்டர்களில் இருந்து, பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களை, இந்த கும்பல் திருடியுள்ளது. பாதுகாப்புத் துறையின் பல முக்கிய பைல்கள் இவர்கள் வசம் இருப்பதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நடந்த சீனாவின் இந்தச் செயல் குறித்து, இம்மாதம் முதல் வாரத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டதாக, செய்திகள் வெளியானது.தொழில்நுட்ப நிபுணர் குழு மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், தனியார் பாதுகாப்பு வல்லுனர்களுடன் சேர்ந்து, இந்த திருட்டை சீனா நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. “ஆர்மி சைபர் பாலிசி’ என்ற இணைப்புடன், டி.ஆர்.டி.ஓ., அதிகாரிக்கு வந்த, “இ – மெயிலை’ திறந்தவுடன், அதன் மூலமாக அனைத்து தகவல்களும் திருடப்பட்டு விடுகின்றன.
இது குறித்த தகவல் தெரிந்தவுடன், இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் ஆராய்ந்ததில், “ஹேக்’ செய்யப்படும் அனைத்துத் தகவல்களும், சீனாவில் உள்ள, “குவாண்டாங்’ என்ற இடத்தில் உள்ள, “சர்வர்’ மூலம் பதிவேற்றம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.தேசிய பாதுகாப்பு அமைப்பு, இதற்கு முன் நடந்த திருட்டை இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்ததில்லை. இம்முறை மிகத் துல்லியமாக கண்டறிந்துள்ளது.ஐதராபாத்தில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு குறித்த ஆவணங்கள், ரேடார் மற்றும் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பைல்கள், இம்முறையில் திருடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட பைல்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், டி.ஆர்.டி.ஓ., மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஒப்பந்தம், பிரான்ஸ் ஏவுகணை நிறுவனத்துடனான பணப் பட்டுவாடா உள்ளிட்ட பைல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் திருட்டை தனியார், “ஹேக்கர்’கள் செய்ய முடியாது. இவர்களுடன் சீன அரசு சம்பந்தப்பட்டுள்ளது. “ஹேக்’ செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட, “சர்வர்’ சீனாவில் உள்ளது. இதற்காக, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள, “சர்வர்’ பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே சீனா, பிற நாடுகளின் ரகசியங்களைத் திருடிவந்துள்ளது. அமெரிக்காவின் ரகசியங்களையும், சீனா, “ஹேக்’ செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.