காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெருமாளின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 13 -ம் தேதி ஸ்ரீநகரில் மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் உள்பட 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். வீரர் பெருமாளின் உடல் இன்று (15.03.2013) அதிகாலையில் சொந்த ஊரான பேரையூர் தும்மநாயக்கன்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. பெருமாளின் உடலைக் கண்டு குடும்பத்தினரும், கிராம மக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பெருமாளின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
அதனை பெற்றுக் கொண்ட பெருமாளின் தந்தை லிங்கம், தன் கடைசி மகன் மகேஷூக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை மனு கொடுத்தார்.
“தங்கள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை முதல்வர் செய்து தருவார்” என்று அமைச்சர் வாக்குறுதி கொடுத்தார்.
”வீரமரண மரணம் அடைந்த பெருமாளின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்” என்று முதல்வர் அறிவித்திருந்ததால், பெருமாளின் உடலுக்கு தமிழக போலீஸார் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். பிறகு, சி.ஆர்.பி.எஃப். சார்பில் தனியாக 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் உடல் அடக்கம் நடந்தது.