இலங்கை, வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடுகளை அடாவடியாக இராணுவத்தினர் தொடர்ந்து இடித்து அழித்து வருகின்றனர்.
படையினரின் தேவைக்காக வலிகாமம் வடக்கின் சில பகுதிகள் மக்களிடம் கையளிக்கப்படாது சுவீகரிக்கப்படுமென அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த காணி அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவித்துச் சென்றுள்ள நிலையில், தமது வீடுகளை முழுவீச்சில் இராணுவத்தினர் இடித்தழித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
இவ்வாண்டு ஆரம்பத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் மக்களுடைய வீடுகளை படையினர் வெளிப்படையாகவே கனரக வாகனங்களின் உதவியுடன் இடித்து அகற்றினர். இவற்றை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்த போதும் எவற்றையும் செவிமடுக்காது இடிக்கத் திட்டமிட்ட அனைத்து வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கினர். இதனையடுத்து சிறிது காலம் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் வலிகாமம் வடக்கில் கீரிமலை, நகுலேஸ்வரம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தமது வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கையில் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதிகளில் கடற்படையினரின் முகாம்கள் அமைந்திருப்பதாகவும் அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு வேலிக்கு அருகாக போடப்படும் வீதிக்கு தடங்கலாகவுள்ள வீடுகள் ஏற்கனவே இடிக்கப்பட்டதைப் போன்று தற்போது அந்த வீதியுடன் இணைக்கும் குறுக்கு வீதிகளை படையினர் அமைத்து வருவதாகவும், அதற்கு தடங்கலாகவுள்ள வீடுகளையும் படையினர் இடித்து அகற்றிக் கொண்டிருப்பதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.
எமது வீடுகள் எமது கண்ணுக்கெதிரிலேயே இடித்தழிக்கப்படுவதை நாம் பார்த்து பதறிக் கொண்டிருக்கிறோம். கண்ணீர்விட்டு கதறியழுவதைத் தவிர எம்மால் எதையும் செய்ய முடியாது உள்ளது.
எனவே, பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது பெறுமதியான வீடுகளை படையினர் கண்மூடித்தனமாக இடித்தகற்றுவதை உடன் தலையிட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.