முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் இருந்து வருகிறது. நீர்மட்டத்தை உயர்த்தும் அளவுக்கு, முல்லைப் பெரியாறு அணை வலுவாக, உறுதியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு தனது இறுதி அறிக்கையை கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தது.
இந்த அறிக்கையில், நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் அளவுக்கு உறுதியாக இருப்பதாகவும், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கும் வலிமை அணைக்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்மீது தங்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்யும்படி, தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், நீதிபதி ஆனந்த் குழுவின் இறுதி ஆய்வறிக்கையின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தும்படி, கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும்படி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்த தீர்மானத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இரு மாநில அரசுகளின் பதில் மனுக்கள் மீதான விசாரணை, வருகிற ஏப்ரல் 9-ந்தேதி அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.