காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காவிரிநீர் பங்கீடு குறித்து காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 2007–ம் ஆண்டு வெளியிட்டது. அந்த தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மத்திய அரசு அதனை நிறைவேற்றாததால் இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு அதனை ஏற்று மத்திய அரசு காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையொட்டி மத்திய அரசு பிப்ரவரி 19–ந்தேதி மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை வெளியிட்டது.
ஆனால் அதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் இவற்றை அமைக்கக்கூடாது என்று கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. கர்நாடக அரசியல் கட்சி பிரமுகர்கள் பிரதமரையும் சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மத்திய அரசு இதிலும் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 18.03.2013 ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மே மாதம் முதல் வாரத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். காவிரி பிரச்சினையில் மத்திய அரசு மிகவும் மெத்தனமாக செயல்படுகிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டு இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.