இரட்டை விலைக்கு இடைக்கால தடை: பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அதே விலையில் போக்குவரத்து கழகங்களுக்கும் டீசல் சப்ளை

tntpcடீசல் விற்பனையில் இரட்டை விலை முறையை எண்ணை நிறுவனங்கள் ஜனவரி மாதம் 18-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தியது.

பெட்ரோல் பங்குகளில் சில்லறை விற்பனைக்கு ஒரு விலையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒரு விலையும் நிர்ணயித்து விற்பனை செய்தது.

பெட்ரோல் பங்குகளில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.51.25 பைசாவிற்கும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒரு லிட்டர் டீசல் ரூ.62-க்கும் விற்கப்பட்டது.

11 ரூபாய் அதிகமாக நிர்ணயித்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் வழங்கப்பட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதால் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு அரசு பஸ்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் டீசல் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் பெட்ரோல் நிலையங்களில் டீசல் நிரப்பிக்கொண்டு அதற்கான தொகையை கொடுத்து வந்தது.

மேலும் டீசல் இரட்டை விலை விற்பனையை எதிர்த்து மத்திய அரசின் எண்ணைய் நிறுவனங்கள் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டன. அரசு சார்பில் போக்குவரத்துறை செயலாளர் பி.கே.பிரசாத் தொடர்ந்த வழக்கில் இரட்டை விலையில் டீசல் வழங்காமல் ஒரே விலையில் டீசல் விற்பனை செய்ய வேண்டும்.

அதிக கொள்முதல் செய்யும் மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அதிக விலை விதிப்பது முறையல்ல. அதனால் இரட்டை விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் எடுத்து கூறப்பட்டது.

இதையடுத்து டீசல் இரட்டை விலை விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் பழையபடி அரசு போக்குவரத்து கழகங்களுக்கு எண்ணை நிறுவனங்கள் நேரடியாக டீசல் விற்பனை செய்ய உள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அதே விலையில் போக்குவரத்து கழகங்களுக்கும் டீசல் சப்ளை செய்ய இருக்கிறது.

போக்குவரத்து கழக பணிமனைகளில் நாளை அல்லது நாளை மறுநாள் முதல் வழக்கம் போல் டீசல் சப்ளை செய்யப்பட இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால் இனி பெட்ரோல் நிலையங்களில் அரசு பஸ்கள் டீசல் நிரப்ப காத்து நிற்க தேவையில்லை. இரட்டை விலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு தினமும் ஒரு கோடியே 87 லட்சம் கூடுதல் செலவு மிச்சமாகிறது.

 

Leave a Reply