பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (20.03.2013) கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழக கடலோரத்தில் நேற்று இரவு பாக்ஜலசந்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது 2 தடவை இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி இருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள ராணுவத்தினர் இரும்பு பைப்புகளால் தாக்கி உள்ளனர். அதுபோன்று நாகை மாவட்டம் நம்பியார் நகரில் இருந்து மீன் பிடிக்க சென்று இருந்த 6 மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் அரிவாளால் வெட்டி தாக்கி உள்ளனர். இதில் 4 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த 4 மீனவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா மிக கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து இந்த விஷயத்தில் பல தடவை எதிர்ப்புகளை தெரிவித்து வந்த போதிலும் மத்திய அரசு தூதரகம் மட்டத்தில் எந்தவித ஆக்கப்பூர்வமான வலுவான நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் தருகிறது.
மத்திய அரசு இப்படி அலட்சியமாக நடந்து கொள்ளும் காரணத்தால் தான் இலங்கை கடற்படையினர் இத்தகைய கொடூரமான தாக்குதல்களை தமிழக மீனவர்கள் மீது நடத்துகிறார்கள். நேற்றும் இன்று அதிகாலையிலும் நடந்த தாக்குதலின் போது அரிவாளால் வெட்டி இருப்பது கண்டனத்துக்குரியது. அப்பாவி தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். அவர்களும் இந்தியர்கள்தான்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது இது 4-வது முறையாகும். ஏற்கனவே சிங்கள கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 19 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 14-ந்தேதி இது தொடர்பாக நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்த போதிலும் இன்னமும் ராமேசுவரம் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. எனவே அந்த மீனவர்கள் விடுவிக்கவும், அப்பாவி தமிழக மீனவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.