ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரியும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் 20.03.2013 காலை 11.30 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மும்பை தமிழர்கள் பாதுகாப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மும்பை மாநகராட்சி கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் பங்கு ஏற்றனர்.
இந்த ஆர்பாட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போனதற்கு இந்தியாவும் கூட்டுக்குற்றவாளிதான் ‘ஈழத்தமிழர் படுகொலை குறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும்; இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்; தனி ஈழம் உருவாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.
இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் அல்ல; அது ஒரு இனப்படுகொலை. இந்தப் படுகொலைக்கு இலங்கைக்கு உதவிய இந்திய அரசும் கூட்டுக்குற்றவாளிதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.