மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை!

cbi ride டெல்லியில் இருந்து 7 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் இன்று (21.03.2013) காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். நேராக கார்களில் தேனாம்பேட்டை சென்டாப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினார்கள். காலை 7.15 மணிக்கு அவர்கள் சோதனையை தொடங்கினார்கள். அந்த சோதனை 8.30 மணி வரை நடைபெற்றது.

 சோதனையின்போது மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். மு.க.ஸ்டாலின் மகனும் சினிமா பட அதிபருமான உதயநிதி ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் ரூ. 1 கோடி மதிப்புள்ள `ஹம்மர்’ சொகுசு காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இருந்தார். இதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்பட்ட புகாரையடுத்து இந்த சோதனை நடந்ததாக தெரிய வருகிறது.

black-hummer-h3udhayanithi இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அலெக்ஸ் என்பவர் மூலம் இந்த சொகுசு காரை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். இந்த காரை அவர் பரிசாக கொடுத்தாரா? அல்லது எப்படி பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தால் காரை திருப்பி ஒப்படைக்க தாங்கள் தயாராக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து சோதனையை முடித்து விட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியேறினார்கள். அவர்களிடம் நிருபர்கள் கேட்ட போது, அவர்கள் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

 அமெரிக்க தீர்மானத்தில் முக்கிய திருத்தங்கள் செய்யக் கோரி தி.மு.க. மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்ததுடன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது. நேற்று தி.மு.க. மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்தனர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய மறுநாளே ஸ்டாலின் வீட்டில் நடந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதுபற்றி மு.க.ஸ்டாலின் கூறும்போது, “சி.பி.ஐ. சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதை சட்டப்படி சந்திப்போம்” என்றார். என்ன காரணத்துக்காக சோதனை நடத்தப்பட்டது என்று கேட்டபோது, “அது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடமே கேளுங்கள்” என்று ஸ்டாலின் பதில் அளித்தார். ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்திய தகவல் பரவியதும் ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் அங்கு திரண்டு வந்தனர்.

Leave a Reply