தமிழக பட்ஜெட் தாக்கல்: வரவு செலவு திட்டத்தில் புதிய வரிகள் இல்லை

pr210313cதமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதில் பங்கேற்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா காலை 10.20 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார்.

10.28 மணிக்கு தி.மு.க. சட்டமன்ற தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தார். 10.30 மணிக்கு சபாநாயகர் தனபால் சபை நடவடிக்கைகளை தொடங்கி வைத்ததும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து 2013-2014-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) தாக்கல் செய்து பேசினார்.

அப்போது வரவு செலவு திட்டத்தில் புதிய வரிகள் கிடையாது என்றும் நடைமுறையில் உள்ள வரி விகிதத்தை உயர்த்துவதோ தேவையில்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக கூறினார்.

பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, மாநிலத்தின் வரி வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. மூலதனத்தை ஈர்க்கும் வாய்ப்புகளில், குறிப்பாக, உற்பத்தி துறையில் ஒரு பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு பொருளாதார நிலை சீரமைக்கப்பட்டு வருவதால் மதிநுட்பமிக்க கொள்கை முடிவுகளின் மூலம் 2012-2013-ம் ஆண்டு வரவு-செலவு திட்ட வரி வசூல் இலக்கு எய்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


துரிதமான வளர்ச்சியுடன், அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய வளர்ச்சிப் பாதையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துச் செல்வதில், தமது பங்கினை ஆற்றிட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த சவாலான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வரவு-செலவுத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறைகள் வருமாறு:-

* முதன்மைத் துறைக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதுடன், சேமிப்புக் கிடங்குகள், விற்பனைக் கட்டமைப்பு போன்றவற்றில் முதலீடுகளை அதிகரித்தல்.

* மின் உற்பத்தி, சாலை இணைப்புகள் போன்றவற்றை வலுப்படுத்த கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய திட்டங்களில் அதிக முதலீடு செய்து, அவற்றை விரைவாகச் செயல்படுத்துதல்.

* மாநிலத்தின் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக, தென் மாவட்டங்களில் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடுதல் சிறப்புச் சலுகைகள்.

* அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை மீண்டும் உயர்த்தி உறுதிப்படுத்தவும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைத் தொகுப்பு.

* தரம் மிக்க நகர்ப்புறக் கட்டமைப்புகளை ஏற்படுத்திட அதிக நிதி ஒதுக்கீடு.

* பொருளாதார நிலையில் பின்தங்கிய பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் ஆகியோருக்குத் தேவையான நகர்ப்புற வீட்டுவசதித் திட்டங்களில் கூடுதல் முதலீடு.

* திறன்மிக்க நிர்வாகத்தின் மூலமாக, சிறப்பாகச் சேவைகளை அளித்து, நலத்திட்டங்களின் செயலாக்கத்தை மேம்படுத்துதல்.

* உற்பத்தித் திறன்மிக்க, அதிக வருவாய் கிடைக்கக் கூடிய வேலைகளுக்கான திறன் வளர் பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்கவும், வறுமைக் குறைப்பிற்கும் முக்கியத்துவம் அளித்தல்.

* வறியோர், ஆதரவற்றோரைப் பாதுகாத்திடும் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்.

* கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சமூக மேம்பாட்டுத் துறைகளுக்கான நிதிப் பயன்பாட்டை அதிகப்படுத்துதல் வறியோர் மீது எந்த ஒரு கூடுதல் வரிச்சுமையையும் சுமத்தாமல், விவேகமான நிதிமேலாண்மை மூலமாக 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்ட நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 

Leave a Reply