மத்தியில் காங்கிரஸ் கூட்டணி 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும், மன்மோகன்சிங் தனது முழு பதவி காலத்துக்கும் பிரதமராக நீடிப்பார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். தற்போது கூட்டணி கட்சிகள் மிரட்டலால் முன்கூட்டி தேர்தலை சந்திக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு மீது கூட்டணி கட்சிகள் மோதல் போக்குடன் செயல்படுவதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. போதிய பலம் இல்லாமல் மற்ற கட்சிகள் தயவில் ஆட்சி நடப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முன் கூட்டியே தேர்தலை சந்திக்கும் திட்டத்தில் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது.
உத்தரபிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த முலாயம் சிங் யாதவும் பாராளுமன்றத்துக்கு முன் கூட்டி தேர்தல் வருவதை விரும்புகிறார். அங்கு பல்வேறு பிரச்சினையால் மாநில அரசுக்கு கெட்ட பெயர் உருவாகும் முன்பு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். எனவே அவரும் ஏதாவது காரணத்தை சொல்லி ஆதரவை வாபஸ் பெறுவார்.
மத்திய அரசு கவிழ்ந்தால் மக்களிடம் காங்கிரஸ் மீதான நம்பிக்கை இழந்து விடும். எனவே அரசு கவிழும் முன்பே தேர்தலை சந்திக்கும் முடிவில் காங்கிரஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளது.