திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் தை இரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் ஜல்லிகட்டு போட்டிக்கு பேரிகாட் (தடுப்பு வேலி) அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிகட்டு போட்டி விளங்குகிறது. இந்த ஜல்லிகட்டு போட்டி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் பரவலாக நடத்தப்படும். மேலும், கோவில் திருவிழாக்களை முன்னிட்டும் ஜல்லிகட்டு போட்டி நடத்தப்படும்.
ஜல்லிகட்டு போட்டிக்கு கடந்த ஆண்டுக்கு முன்பு உச்ச நீதி மன்றம் தடை விதித்திருந்ததால் ஜல்லிகட்டு போட்டி தமிழகம் முழுவதும் நடத்த முடியவில்லை. இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கடந்த ஆண்டு தமிழக முழுவதும் ஜல்லிகட்டு போட்டிக்கு விதித்துள்ள தடையை நீக்க கோரி அறவழியில் மாபெரும் போராட்டங்களை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக ஜல்லிகட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூல் ஆண்டு தோறும் தை திங்கள் இரண்டாம் நாளான மாட்டு பொங்கல் அன்று ஜல்லிகட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு தான் அனுமதி கிடைத்தது. அதனால் சூரியூரில் ஜல்லிகட்டு போட்டி நடத்த முடியவில்லை.
இந்நிலையில் சூரியூரில் இந்த ஆண்டு வழக்கம் போல் மாட்டுபொங்கல் தினத்தன்று ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு சூரியூர் கிராமத்தினர் முடிவு செய்ததோடு, அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று, தற்போது ஜல்லிகட்டு போட்டியின் போது பொதுமக்கள் பாதுகாப்புடன் ஜல்லிகட்டு போட்டியை கண்டுக்களிக்கும் விதத்தில் பேரிகாட் (இரண்டடுக்கு தடுப்பு வேலி) அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து திருவெறும்பூர் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஜல்லிட்டு காளைகளின் உரிமையாளர்கள் தங்கள் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
–ஆர்.சிராசுதீன்.