சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!- முழு விபரம்.

dmk meeting1

dmk meetingசென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!- முழு விபரம்.

தீர்மானம் : 1

2-ஜி வழக்கில் முன்னாள் பிரதமரின் பாராட்டு.

2ஜி அலைக்கற்றை வழக்கில் தங்களுடைய வாதங்களை ஆணித்தரமாக எடுத்து வைத்து, புனையப்பட்ட பொய் வழக்கு என்று நிரூபித்து விடுதலை அடைந்துள்ள மத்திய முன்னாள் அமைச்சர் திரு ஆ.இராசா அவர்களுக்கும், மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருமதி கனிமொழி அவர்களுக்கும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் மனமார்ந்த பாராட்டுதல்களையும் – வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டின் பன்முகத்தன்மைக்கும், சமூகநீதிக் கொள்கைக்கும் உறுதியுடன் போராடி மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்கு துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை நிலைகுலைய வைத்திட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், தொலைத் தொடர்புத் துறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை மறைத்து 1.76 லட்சம் கோடி ரூபாய் கருத்தியல் ரீதியான கற்பனைக் கணக்கும், அதனைக் காரணம் காட்டி மத்திய புலனாய்வுத் துறையால் போடப்பட்ட அலைக்கற்றை ஊழல் வழக்கும் இன்றைக்கு நிரூபிக்கப்படாத கணக்கு, ஆதாரமற்ற வழக்கு என்று விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவும், மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருமதி கனிமொழியும் வழக்கை இழுத்தடிக்காமல், நீதித்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கழகத்தின் மீதான களங்கத்தையும் துடைத்தெறிந்துள்ளார்கள்.

மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், “2ஜி வழக்கில் நீதி கிடைத்துள்ளது” என்று கூறியிருப்பதை மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் பதிவு செய்து, கற்பனை செய்து சுமத்தப்பட்ட மாயாவிக் கணக்கையும் வழக்கையும் சுக்கு நூறாக்கி, அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் நேர்மை நெறிமுறைகளைப் போற்றும் மாபெரும் இயக்கம் என்று நிலைநாட்டப்பட்டுள்ள உண்மையை மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் பெருமிதத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தீர்மானம் : 2

“போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையில்,
முதலமைச்சரே பேசி முடித்து வைக்க வேண்டும்”

போக்குவரத்து தொழிலாளர்களின் 13-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் தங்களது அடிப்படை சம்பள விகிதத்தை 2.57 மடங்காக உயர்த்த வேண்டும் என்றும், தங்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து அரசு சட்டவிரோதமாக செலவிட்ட 7000 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள். அரசின் தரப்பில் 23 முறை பேசி விட்டதாகக் கூறினாலும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல், 2.44 மடங்கு மட்டுமே அடிப்படை சம்பள உயர்வு அளிக்க முடியும் என்று பிடிவாதமாக போக்குவரத்து துறை அமைச்சர் கூறி வந்ததால், தொழிலாளர்கள் வேறுவழியின்றி போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு பொதுமக்கள் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் கோரும் சம்பள உயர்வுக்கும், அரசு கொடுப்பதாக ஒப்புக்கொள்ளும் சதவீதத்திற்கும் வெறும் 0.13 சதவீதம் மட்டுமே வேறுபாடு என்பதால் முதலமைச்சர் போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து சுமூக தீர்வு காண வேண்டும் என்று கழகச் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 5.1.2018 அன்று அறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டார். போராட்டம் தொடருவதால் மக்கள் படும் இன்னல்களைக் கண்ட செயல் தலைவர் அவர்கள் மீண்டும் 6.1.2018 அன்று முதலமைச்சர் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கிக் கூறி, போக்குவரத்து தொழிலாளர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்திடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் அரசாங்கத்தின் முக்கியமான அங்கம் என்பதாலும் அவர்களும் நாமும், ஒருதாய் மக்களே என்பதாலும் பேச்சுவார்த்தை நடத்துவதையே ஒரு கவுரவப் பிரச்சினையாக அரசு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்பதை உணர்ந்து,போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு பரிவுடனும் தோழமை உணர்வுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கண்டு போராட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கும், பொதுமக்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் வழிகாண வேண்டும் என மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3

அரசியல் சட்டத்திற்கு எதிரான ஆளுநர் ஆய்வைத் தடுத்து நிறுத்திடுக!

அதிமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து நிற்கிறது. அனைத்துத் துறைகளும் செயலாற்ற இயலாமல் ஸ்தம்பித்துக் கிடக்கின்றன. முதலமைச்சரோ மாநிலத்தின் உரிமைகள் எதையும் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். நிர்வாகப் பணிகளை மறந்து முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி கோட்டையிலும், விழாக் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டிருக்க, மக்களாட்சியின் மாண்புகள் முற்றிலும் மீறப்பட்டு, அரசியல் சட்டத்தின்படி ஆற்ற வேண்டிய முக்கியக் கடமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆளுநர் ஆட்சி நடக்கிறதோ என்று கருதும் அளவிற்கு மாவட்ட ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் மாண்புமிகு தமிழக ஆளுநர். சகலவிதமான எதிர்ப்புகளுக்குப் பின்னரும் நடைபெறும் இந்த ஆய்வுகள் மாநில சுயாட்சிக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மட்டுமல்லாமல் பா.ஜ.க. சென்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்த “கூட்டுறவுக் கூட்டாட்சிக்கே” முரணாக உள்ளது. மாண்புமிகு ஆளுநரின் ஆய்வுகளை அமைச்சர்கள் வரவேற்றுப் பேசுவதுடன், “மக்கள் ஆளுநர்” என்று பாராட்டி, மத்திய அரசுக்கு அஞ்சி நடுங்கி, ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கி, உதவாக்கரையானதோர் ஆட்சியை தமிழக மக்கள் நலனுக்கு முற்றிலும் விரோதமாக நடத்தி வருகிறார்கள்.

மாநில சுயாட்சி முழக்கம் உரக்க ஒலித்த இந்த மண்ணில், முதலமைச்சர் ஒருவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் மாவட்டந்தோறும் ஆய்வுகளை மேற்கொள்வதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் வேடிக்கைப் பார்த்து, ரசித்து, “சர்க்கஸ் கூடாரம்” போன்ற ஒரு அமைச்சரவை பதவியில் தொடர அனுமதித்து, தமிழக மக்கள் எப்படியோ போகட்டும் என்று எதிர்மறை எண்ணத்தில் இன்பம் காண்கிறது. ஆகவே, மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசமைப்புச் சட்ட நடைமுறைகளுக்கும் விரோதமாக நடைபெறும் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஆய்வுகளை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும் என்றும், புதிய மரபுகளை உருவாக்கிடத் துணைபோக வேண்டாம் என்றும் மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 4
ஒகி புயல் நிவாரண நிதியை உடனே வழங்கிடுக!

“ஒகி” புயலின் பாதிப்பிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் இன்னும் மீளவில்லை. ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை, மத்திய – மாநில அரசுகள் இத்தனை நாட்களுக்குப் பிறகும் உறுதியாக வெளியிடவில்லை. தங்கள் உறவினர்களைக் காணாமல், குடும்பத் தாய்மார்கள் கண்ணீர்க் கடலில் மூழ்கியுள்ளதை இங்குள்ள அதிமுக அரசும் கண்டுகொள்ளவில்லை. பிரதமர் நேரடியாக வந்து கன்னியாகுமரி சேதங்களை பார்வையிட்டுச் சென்ற பிறகும் கூட நிலைமையில் மாற்றம் இல்லை.

ஒகி புயல் தாக்கி 40 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்றுவரை தமிழக அரசு கோரிய 13,520 கோடி ரூபாய் நிதி வழங்கப்படவில்லை. ஆகவே, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் திருத்தி, மறுசீரமைக்கவும், குமரி மாவட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் உடனடியாக மத்திய அரசு நிதி வழங்கிட வேண்டும் என்றும், கன்னியாகுமரியைத் தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும், காணாமல் போயிருக்கும் அனைத்து மீனவர்களின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரண உதவியை மேலும் காலதாமதம் செய்யாமல் வழங்கிடவும், காணாமல் போன மீனவர்கள் தொடர்பான விதிமுறைகளைத் தளர்த்திடவும், கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு ஆபத்துக் காலங்களில் உதவும் ‘ஒயர்லெஸ்’ கருவிகளை வழங்கிடவும் மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

பேரிடர்க் காலங்களில் மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு ஏற்றவாறு மாநில பேரிடர் மீட்பு ஆணையத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், பேரிடர் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 5
“மைனாரிட்டி” அரசால் தீராத பிரச்சினைகளில் திண்டாடும் தமிழகம்!

‘குதிரை பேர’அரசின் நிர்வாக அலட்சியத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுந்துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு, மண்ணெண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத அவல நிலைமை, விவசாயிகளின் டிராக்டர்களை வங்கிகள் பறிமுதல் செய்யும் கொடுமை, வேலையில்லாத் திண்டாட்டம், முடமாக்கப்பட்டு விட்ட கட்டுமானத் தொழில், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் முரண்டு பிடிப்பது, இல்லத்தரசிகளையும், வேலைக்குச் செல்லும் பெண்களையும் அச்சுறுத்தும் செயின் பறிப்பு, கொள்ளை, சிதைந்து – சீரழிந்து விட்ட சட்டம் – ஒழுங்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட குழப்பங்கள், தொழில் செய்ய முடியாமல் திண்டாடும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், அல்லாடும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கமிஷன் பிரச்சினையால் வேறு மாநிலங்களுக்கு ஓடும் பெரும் தொழில் நிறுவனங்கள், பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள தடையால் அந்தத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும் போராட்டமும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் முடங்கிக் கிடக்கும் உள்ளாட்சி நிர்வாகம், வழி நடத்துவதற்கு திறமைமிக்க தலைமையின்றி தவித்துக் கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். நிர்வாகம் போன்ற தீராத எண்ணற்ற பிரச்சினைகளை தமிழக மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

அரசு நிர்வாகம் பற்றிக் கவலைப்படாமல் ஊதாரித்தனம், ஊழல், விழாக் கொண்டாட்டம், வீராப்புப் பேச்சு ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்திக் காலத்தைக் கழித்து வரும் இந்த “மைனாரிட்டி” அதிமுக அரசுக்கு மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 6
“முத்தலாக்” விவகாரம்: இஸ்லாமியர்களின் அச்சத்தைப் போக்கிடுக!

“முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்புச் சட்டம்”, என்ற பெயரில் “முத்தலாக்கை” சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றி அவசர அவசரமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. அரசு நினைப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. “மூன்று வருட சிறை தண்டனை” என்ற கடுமையான பிரிவு இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு மாறாக, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் எதிரானது என்று மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கருதுகிறது. “இஸ்லாமியப் பெண்களின் தனி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்பதில் பெண்ணுரிமைகளை உயர்த்தி பிடிக்க தொடர்ந்து போராடி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதும் ஆர்வமும், அக்கறையும் உண்டு என்ற போதிலும், ஒரு மதத்தின் ஷரியத் சட்டங்களுக்குள்ளும், சம்பிரதாயங்களுக்குள்ளும் அரசாங்கமே நுழைந்து அவசரமாக ஒரு மசோதாவை – அதுவும் சிறைத்தண்டனை அளிக்கும் மசோதாவை கொண்டு வருவதை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது. ஆகவே, “முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்புச் சட்டத்தால்” இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்கும் வகையிலும், இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளை நியாயமாகப் பாதுகாக்கும் வகையிலும், இந்த மசோதாவை பாராளுமன்ற தேர்வுக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.

“ஆதார்” உள்ளிட்ட எத்தனையோ உச்சநீதிமன்ற தீர்ப்புகளைச் செயல்படுத்துவதில் தாமதம் செய்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, முத்தலாக் தீர்ப்பில் மட்டும் வேகத்தை காட்டுவதற்குப் பதில், பாராளுமன்ற தேர்வுக்குழுவின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைப் பெற்று இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7
தேசிய மருத்துவ ஆணைய மசோதா,
மோட்டார் வாகனத் திருத்த சட்டம் – மறு ஆய்வு செய்க.

நீட் தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை சிதைத்து விட்ட மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது நியமன முறையிலான “தேசிய மருத்துவ ஆணையம்” என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, பன்னாட்டு மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைய தாராள வழி அமைத்துக் கொடுத்து, மருத்துவக் கல்வி படித்து முடித்து விட்டு வரும் மாணவர்களுக்கு தேவையில்லாமல் மீண்டும் ஒரு “தேசிய உரிமத் தேர்வு” ஒன்றை அகில இந்திய அளவில் நடத்தி கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை ஒட்டுமொத்தமாகச் சிதைக்கும் போக்கை மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில் இப்போது “தேசிய மருத்துவ ஆணைய மசோதா” பாராளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், “மருத்துவக் கல்வியில் 60 சதவீத இடங்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளே கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ளலாம்”, என்பன போன்ற அக்கிரமமான விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேசிய மருத்துவ ஆணையத்தில் மாநிலத்திற்கு அதிகப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

அதுமட்டுமின்றி மாநில உரிமைகளைப் பாதிக்கும் வகையிலும், மோட்டார் வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ள இலட்சக்கணக்கானோரை கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கும் வகையிலும், ஆயிரக்கணக்கான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்படும் நிலையிலும், ஓட்டுநர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கும்படியாகவும் அமைந்துள்ள மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் 2017 – தொடர்பான மசோதாவையும் முழுவதுமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 8
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்க!

தங்களின் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனையில் மூழ்கியிருக்கிறார்கள். விவசாயக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத விவசாயிகளின் டிராக்டர்களை ஈவு இரக்கமின்றிப் பறிமுதல் செய்யும் அராஜகப் போக்கை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும் உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கும் விவசாயிகளுக்கு எதிரான அரசாக குதிரைபேர அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படாதது குறித்து அரசுக்கு எந்த கவலையும் இருப்பதாகவே தெரியவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையும் கிடைக்கவில்லை. ஏற்கனவே 1400 கோடி ரூபாய் தனியார் சர்க்கரை ஆலைகளிலும், 218 கோடி ரூபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் நிலுவையில் உள்ள தொகையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. நெல்லுக்கும் உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை. தொடர்ந்து வறட்சியின் கோரப்பிடியில் சிக்குண்டு தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நெல்லுக்கு உரிய விலையினை நிர்ணயிக்க வேண்டுமென்றும், மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 9
தமிழகத்தின் கடன் சுமை- நிபுணர் குழு அமைத்து விசாரித்திடுக!

ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மாநிலத்திற்குக் கடன் சுமையை ஏற்படுத்தி மாநில அரசின் நிதி நிர்வாகத்தை மிகவும் ஆபத்தான கட்டத்திற்கு அதிமுக அரசு கொண்டு சென்றிருக்கிறது. கடன், வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை ஆகிய மும்முனைத் தாக்குதலால் மாநிலம் “நிதி நெருக்கடியில்” சிக்கிக் கொண்டிருப்பதை மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது. கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டிருப்பதால் எந்த வளர்ச்சித் திட்டங்களும், உட்கட்டமைப்புத் திட்டங்களும் இந்த ஆட்சியில் செயலாக்கம் பெறவில்லை. புதிய தொழிற்சாலைகளும் வரவில்லை. புதிய தொழில் முதலீடுகளும் கிடைக்கவில்லை. 85லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு, கன்னத்தில் கை வைத்துக் காத்திருக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நிதி நிலைமையைச் சீராக்குவதற்குத் தேவையான எந்தவித முற்போக்கு நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் அதிமுக அரசு தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அரசு நிர்வாகத்தை மட்டுமின்றி, நிதி நிர்வாகத்தையும் நிலைகுலைய வைத்து தமிழகத்தின் வளர்ச்சியை 20 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துக் கொண்டு போய் விட்டதோடு தமிழகத்தைப் பெரும் கடனாளி மாநிலமாக்கியுள்ள அதிமுக அரசுக்கு மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. உடனடியாக நிதி விவகாரங்களில் தேர்ச்சியும் உயர்ந்த அனுபவமும் பெற்ற ஒரு “நிபுணர் குழுவை” அமைத்து, மாநில நிதி நிலைமையை மேம்படுத்துவது குறித்து விரைந்து ஆய்வு செய்து, அதன்படி மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 10
உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் குளறுபடியான
மறு சீரமைப்புக்குக் கடும் கண்டனம்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை வேண்டுமென்றே ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்திட முன்வராமல் தள்ளிப்போட்டு தாமதித்து வரும் அதிமுக அரசு இப்போது உள்ளாட்சி வார்டுகள் மறு சீரமைப்பில், பல்வேறு வகையான குழப்பங்களையும் குளறுபடிகளையும் புகுத்தி வருகிறது. ஆளுங்கட்சிக்கு வேண்டியவாறு விருப்பப்படி வார்டுகளை ஒருதலைப்பட்சமாக மறுசீரமைப்பு செய்து, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் வார்டுகள் அங்கும் இங்குமாக ஆளுங்கட்சியினரின் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றபடிப் பிரிக்கப்பட்டு வருகின்றன.

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே இந்த உள்நோக்கம் கொண்ட வார்டு சீரமைப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு இருந்தாலும், இன்னும் குளறுபடிகளைக் களைந்திட மாநிலத் தேர்தல் ஆணையம் முறைப்படி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்காமல் ஆளும் அதிமுகவின் அமைச்சர்களும், நிர்வாகிகளும் தலையிட்டு, கூறுகின்ற அறிவுரைகளின்படி வார்டுகளைப் பிரித்து “வார்டு சீரமைப்பு” என்பதற்குப் பதில் “வார்டு சீர்கேடு” என்பதை அரங்கேற்றி வருவதற்கு மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரத்தில் ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தங்களது மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு சீரமைப்பில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்றும்; நியாயமான வகையில் ஒளிவுமறைவின்றி ஜனநாயக ரீதியாக வெளிப்படையான முறையில் வார்டுகளைப் பிரித்து யாருடைய விருப்பத்திற்கும் அசைந்து கொடுக்காமல் நேர்மையான வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 11

மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகிய இலட்சியங்களை வலியுறுத்தி “ஈரோடு மண்டல மாநாடு”!

“மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று. அதற்காகக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள், நீதியரசர் ராஜமன்னார் குழு அமைத்து “மாநில சுயாட்சி” கொள்கைக்கு முதன்முதலில் வழிவகுத்துக் கொடுத்தார். “மாநிலங்கள் மட்டும் மத்திய அரசுக்குத் தேவையில்லாத அதிகாரக் குவியல் என்னும் விலங்குகளால் கட்டுண்டுகிடப்பானேன்” என்ற கேள்விக்கு உரிய அரிய விடையாக, “உறவுக்குக் கை கொடுப்போம். “உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற மாநிலத் தன்மான அடிப்படையிலான உயர்ந்த இலட்சியத்தை உலகுக்கு விளக்கிடும் வண்ணம், வரலாற்றுச் சிறப்புக்குரிய மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர் அவர்கள். அன்றைக்கே “யாருடைய தேச பக்திக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேசபக்தி எள்ளளவும் – இம்மியளவும் குறைந்தது அல்ல” என்பதை அழுத்தம் திருத்தமாக அறிவித்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு அரசியல் சட்டத்தின்படி மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்களையே இங்குள்ள குதிரைபேர அரசு காப்பாற்றிக் கொள்ள வழிதெரியாமல், இழந்து நிற்பது கண்டு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் பெருத்த வேதனையடைகிறது.

தமிழகத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் இன்றுவரை காவிரி தீரத்து விவசாயிகளின் கண்ணீரைச் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்படாமல், மாநிலத்தின் காவிரி நீர் உரிமையை மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கெயில் திட்டம், கதிராமங்கலம் இயற்கை எரிவாயு திட்டம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டம் போன்றவை மூலம் மாநிலத்தின் அடிப்படை ஜீவாதார உரிமை அடித்து நொறுக்கப்படுகிறது. நீட் தேர்வு, தேசிய மருத்துவ ஆணையம், நவோதயா பள்ளிகள் மூலம் மாநிலத்தின் கல்வி, மருத்துவக் கல்வி உரிமையை மத்திய அரசே ஆக்கிரமித்து அபகரித்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. உதய் மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்றவை மூலம் மாநிலத்தின் பொது விநியோகத் திட்டம் மற்றும் மின் திட்டங்கள் தொடர்பான உரிமையை மத்திய அரசே எஜமானப் போக்கில் எடுத்துக் கொள்கிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் மாநிலத்தில் பள்ளிகள் அமைக்கும் உரிமையைக் கூட மத்திய அரசிடம் தாரை வார்த்து நிற்க மாநில அரசு தயாராகி விட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலத்திற்கு ஏற்பட்ட 24 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பிற்கு ஈடாக நிதி பெற முடியவில்லை.

இயற்கைப் பேரிடர்களின் பாதிப்பிற்கு உரிய நிதியை மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்காமல், ஜி.எஸ்.டி. போன்றவற்றால் ஏற்பட்ட இழப்பு நிதியையும் பெற முடியாமல் மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய நியாயமான நிதி உரிமை கூடத் தன்னிச்சையாக மறுக்கப்படுகிறது.

இங்கு வந்திருக்கும் ஆளுநரோ, அமைச்சரவை செய்ய வேண்டியதை, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகத் தாமே தம்தலைமேல் எடுத்துப் போட்டுக் கொண்டு, மாவட்டம்தோறும் சென்று களப்பணி – ஆய்வுப்பணி செய்து, மத்திய பாஜக அரசின் விசுவாச முகவராக வேகம் காட்டி வருவது, மாநில உரிமை மீறலுக்கு மற்றும் ஓர் எடுத்துக்காட்டு. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் திருத்தங்கள், நீட் தேர்வுகள், தேசிய உரிமத் தேர்வுகள், மாவட்ட நீதிபதிக்குக் கூட அகில இந்தியத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மையப்படுத்தி சமூக நீதியை சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அதிகாரப்பசியோடு வாய்பிளந்து கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி வந்தது முதல், இந்தியர்களைப் பாகுபடுத்தி நாட்டைப் பிளவுபடுத்த மதவாத வெறி தலைக்கேறி பேயாட்டம் போடுவதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

ஆகவே மாநில சுயாட்சி, சமூகநீதி, மதநல்லிணக்கம் ஆகிய இலட்சிய தீபங்கள் ஒளிஉமிழ்ந்த தமிழ் மண்ணில் மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி 2018, மார்ச் 24, 25 ஆகிய இரு நாட்கள், தந்தை பெரியார் அவர்கள் பிறந்த பூமியும், பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் முதல் பகுத்தறிவு – சுயமரியாதை அத்தியாயம் தீட்டி அரசியல் வானில் உலாவந்த தீரர்கோட்டமுமான ஈரோட்டில், “ஈரோடு மண்டல மாநாட்டை” வெற்றிகரமாக நடத்துவதென மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

-ஜி.கஜேந்திரன்.

Leave a Reply