திருச்சி தேசிய கல்லூரியில் தமிழாய்வுத்துறையும், சோழ மண்டல தமிழ் இலக்கிய கூட்டமைப்பும் இணைந்து சோழ மண்டல அளவிலான கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சோழ மண்டல தமிழ் இலக்கிய கூட்டமைப்பின் பொது செயலாளர் க.சிவகுருநாதன் வரவேற்புரை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தேசிய கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சுந்தரராமன் தலைமையுரை வழங்கினார். சோழ மண்டல தமிழ் இலக்கிய கூட்டமைப்பின் தலைவர் ஜே.கனகராஜன், திருவாரூர் தொழிலதிபர் சு.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரவ விருந்தினராக தேசிய கல்லூரியின் செயலாளர் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து புலவர் திருவாரூர் இரெ.சண்முகவடிவேல் மாணவர்களிடையே உரையாற்றினார்.
தேசிய கல்லூரியின் தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் ச.ஈஸ்வரன் மற்றும் சோழ மண்டலத் தமிழ் இலக்கிய கூட்டமைப்பு ஆலோசகர் முனைவர் சு.வெங்கடராஜூலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவில் தஞ்சாவூர் குந்தவை நாட்சியார் அரசினர் மகளிர் கல்லூரி மாணவி ச.இனியவள், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை நினைவு விருதையும், ரூ.10,000 ரொக்க பரிசையும் பெற்றார்.
இரண்டாம் பரிசு திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைகழக முதுநிலை மாணவர் த.க.தமிழ்பாரதன் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் நினைவு விருதையும், ரூ.7,500 ரொக்க பரிசையும் பெற்றார்.
மூன்றாம் பரிசு திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர் ஆ.பிரிட்டோ தமிழ்க்கடல் மணி பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் நினைவு விருதையும், ரூ.5,000 ரொக்க பரிசையும் பெற்றார்.
ஊக்கப்பரிசாக திருச்சி காவேரி மகளிர் கல்லூரி மாணவி க.சுவேதா ரூ.2,500 ரொக்க பரிசு பெற்றார்.
இறுதியாக துரை.வீரசக்தி நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
– ரா.ரிச்சி ரோஸ்வா.
-ச.ராஜா.