மத அடிப்படைவாதம், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, அரசுக்கு நெருக்கமான ஒருசில அமைப்புகள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு செயல்படுவது போன்ற காரணங்களால், ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 32 ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது 42 ஆவது இடத்திற்கு சரிந்துவிட்டது.
இந்நிலையில், அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழகத்திற்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள், நதிநீர் இணைப்புத் திட்டங்கள், ஒக்கி புயல் பேரிடர் நிவாரண நிதி போன்றவை குறித்து நிதிநிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களிடம் நேரில் கொடுத்த தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்களில், ஒரு திட்டத்துக்கு கூட இந்த நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படவில்லை.
மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களின் நலன் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி போன்ற சில அறிவிப்புகள் இடம்பெற்றிருப்பது வரவேற்கப்பட வேண்டிய அம்சங்கள் என்றாலும், பா.ஜ.க. அரசு ஏற்கனவே தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழகத்திற்கு என்று அறிவித்திருந்த எய்ம்ஸ் மருத்துமனை இதுவரை வரவில்லை என்பதும், “ஸ்மார்ட் சிட்டிகள்” செயல்வடிவம் பெறவில்லை என்பதும், இந்த அறிவிப்புகளின் மீதான நம்பகத்தன்மையை வெகுவாகக் குறைக்கிறது.
ஒரு குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் “ஹெல்த் இன்சூரன்ஸ்” என்ற அறிவிப்பு, ஏழைக் குடும்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றாலும், ஏழை மக்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கான இதுபோன்ற மருத்துவக் காப்பீடுகள், தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது 2009-ஆம் ஆண்டிலேயே செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பதை நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.
அதேநேரத்தில், இந்த திட்டத்திற்குத் தேவைப்படும் நிதித் தேவைக்காக, நிதி நெருக்கடி நேரத்தில் மாதாந்திர சம்பளம் வாங்குவோரிடம் பிடித்தம் செய்யப்படும் “செஸ்” போல தற்போது பிடித்தம் செய்வது தவறான அணுகுமுறை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
“விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவோம்”, என்று கூறியிருக்கும் மத்திய நிதியமைச்சர், கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் பரிதாபநிலை பற்றிப் பரிவுடன் கவனித்து, அவர்களின் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யத் தவறிவிட்டதோடு, விவசாயிகளின் முன்னேற்றத்துக்குத் தீர்வு காணாததும் ஏமாற்றமளிக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கி, மிகப்பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டிய பலகோடிக்கான இலட்சம் ரூபாய் வராகடன் குறித்து, கனத்த மௌனம் காக்கும் மத்திய அரசு, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயப் பெருமக்களை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பது வேதனையளிப்பதோடு, ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் மத்திய அரசின் பாகுபாட்டையும் வெளிக்காட்டுகிறது.
மாதாந்திர சம்பளம் பெறுவோருக்கு 40 ஆயிரம் ரூபாய் “ஸ்டான்டர்டு டிடெக்சன்” என்று வருமான வரிச்சலுகை அளித்து விட்டு, இன்னொரு பக்கம் கொடுத்த சலுகையை தட்டிப்பறிப்பது போல், மாத சம்பளம் வாங்குவோரின் பயணப்படி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு ஏற்கனவே இருந்த வருமான வரி விலக்கை திரும்பப் பெற்றுள்ளது நியாயமற்றது.
மக்கள் சேவை செய்ய தேர்வு செய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்று அறிவித்து விட்டு, இன்னொரு புறம் மாத சம்பளம் வாங்குவோரிடமிருந்து “சுகாதாரம் மற்றும் கல்வி”, ’செஸ்’ என்று நான்கு சதவீதம் வசூல் செய்வது பாரபட்சமானது.
மூத்த குடிமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செய்யும் மருத்துவ செலவுகளுக்கு விதிவிலக்கு என்று அறிவித்து விட்டு, இன்னொரு புறம் அவர்கள் பரஸ்பர நிதிகளில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புப் பயன்களுக்கும் வரி விதித்திருப்பது, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மன உளைச்சலைத் தரும் செயலாகும்.
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயரும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. வீட்டுக்கடன் வட்டி விலக்கு உயரும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்குத் திட்டம் எதுவுமில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவரையிலான நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க இயலாமல், இறுதிவரை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு போராடிக் கொண்டிருக்கிறது என்பதும், நிதிநிலைச் சீர்திருத்தம் எதையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதும் மத்திய நிதியமைச்சரின் உரையில் எதிரொலித்திருக்கிறது.
இந்த நிதிநிலை அறிக்கையில், நாட்டுமக்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவும் இல்லை, வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் நிறைவையும் தரவில்லை.
ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு “அலங்கார அறிவிப்புகளின்” தொகுப்பே தவிர, கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி, இரண்டு கோடி பேருக்கு அர்த்தமுள்ள வகையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ, நாட்டின் நிதிப் பற்றாக்குறையை சரி செய்யவோ, இந்திய பொருளாதாரத்தை ஏற்றமிகு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கவோ முனைப்புள்ள திட்டங்கள் ஏதும் தென்படவில்லை.
கடந்த 2014 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் என்ன, இந்த நான்கு வருடத்தில் வெளியிட்ட அறிவிப்புகள் என்ன, நிறைவேற்றியது என்ன என்பதையெல்லாம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஒருமுறை “சுயபரிசோதனை” செய்து கொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பம்.
அப்படி உண்மையிலேயே சுயபரிசோதனை செய்துகொண்டால், வாக்காளர்களுக்கு வெற்று வாக்குறுதிகளையும், வீண் முழக்கங்களையும் கொடுத்துத் தொடர்ந்து திசைதிருப்பி வருவது, அவர்களது மனசாட்சிக்கே தெள்ளென விளங்கும்.
இவ்வாறு தமிழக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-கே.பி.சுகுமார்.