திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் தொட்டபட்டி கிராமத்தில் வசிக்கும் பரமசிவம் – பார்வதி தம்பதியரின் மகன் தர்ணீஷ்(9), பொங்கலூர் அரசுப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனது தாத்தா திருமுருகனுடன் துணி துவைக்க அருகிலுள்ள பி.ஏ.பி., வாய்க்காலுக்குச் சென்றுள்ளான், அப்போது வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டான். உடனிருந்த சிறுவனது தாத்தா இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
இதையடுத்து அருகில் இருந்த கிராம பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், அவினாசிபாளையம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9ம்தேதி அன்று வாய்க்காலில் மாயமானச் சிறுவனைத் தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சிறுவன் மாயமாகி இன்றுடன் ஐந்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தேடும் பணியில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்பதை மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆவேசமடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று சிறுவன் தர்ணீசை கண்டுபிடித்துத் தரக்கோரி பல்லடம் டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டும் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு டி.எஸ்.பி இல்லாத நிலையில் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அவினாசிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
– மு.ராமராஜ்.
–ச.ரஜினிகாந்த்.