கும்பகோணத்தில் மாசி மகப்பெருவிழா!-மகா மகக் குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

கும்பகோணம் என்றாலே நினைவுக்கு வருவது 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகாமகத் திருவிழா தான். இதை மெய்ப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் மாசிப்பெருவிழா நடப்பது வழக்கம். இதை முன்னிட்டு பக்தர்கள் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

இந்த மகாமகக் குளத்தில் இந்திரன், அக்னி, யமதீர்த்தம், நிருதி, வருணன், வாயுதீர்த்தம், குபேரன், ஈசானம், கங்கை, யமுனா, சரஸ்வதி, சிந்து, காவிரி, கோதாவரி, நர்மதா, யமுனா, தாமரபரணி, கிருஷ்ணா போன்றவை கலப்பதாக ஐதீகம்.

அதன்படி, இன்று காலை மாசிப் பெருவிழா கும்பகோணம் மகாமகக் குளத்தில் நடைப்பெற்றது. கும்பகோணம் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மகாமகக் குளத்தில் புனித நீராட குவிந்தனர்.

பலர் அவர்களின் முன்னோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யத் தவறியவர்கள், இன்று செய்தால் அந்த பாவத்தில் இருந்து விடுபடலாம் என்பதால் தர்ப்பணம் கொடுத்தனர்.

காவல்துறையின்   பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் மகாமகக் குளத்தின் ஒரு பகுதி மட்டும் தர்ப்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. குளத்தின் மூன்று பக்கம் பக்தர்கள் குளிக்க காவல்துறையினர் அனுமதித்தனர்.

கும்பேஸ்வர ஸ்வாமி, நதகேஸ்வர ஸ்வாமி, கோணேஸ்வர ஸ்வாமி, காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், வானபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கோடீஸ்வரர் ஸ்வாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய ஸ்வாமிகள் அந்தந்த கோவில்களில் இருந்து ஊர்வலமாக வந்து, மகா மகக் குளத்தை சுற்றிய பின் அனைத்து ஸ்வாமிகளும் தீர்த்தம் கண்டருளினர். அப்போது ஏராளமான பக்கதர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் புனித நீராடி விட்டு வெளியே வந்து உடை மாற்றிக் கொள்ள எந்த வசதியும் இல்லை. அதேபோல், குடிநீர் வசதி, கழிவறை வசதி இல்லை. இதனால், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் மிகவும் அவதிப்பட்டதைக் காண முடிந்தது.

மகாமகக் குளத்திற்கு வரும் நான்கு பகுதியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, குளத்துக்கு நடந்து மட்டுமே செல்ல அனுமதித்தனர். இருசக்கர வாகனங்களை   கூட அனுமதிக்கவில்லை. இதனால், வயதானவர்கள் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.

ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதை உடனடியாக தடுக்க வேண்டி தீயணைப்பு வாகனம், தண்ணீரில் யாரும் மூழ்கினால் காப்பாற்றுவதற்காக படகு மூலம் மீட்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அதேபோல், 108 ஆம்புலன்ஸ், 108 டூவீலர், பக்தர்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வந்து நிறுத்தியிருந்தனர்.

அண்ணா சிலை அருகே வி.ஐ.பி.க்கள் யாராவது வந்தால் கூட்ட நெரிசலில் சிக்கி விடாமல் இருக்க வேண்டி தனியாக அவர்கள் நீராட வசதி செய்யப்பட்டு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

 -க.குமரன்.

 

 

Leave a Reply