சட்டத்திற்கு விரோதமானவர்களையும், சமூக விரோதிகளையும், நீதியின் முன்பு நிறுத்தி, குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், இப்படி அநியாயமாக தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும், தூக்கு மாட்டிக்கொண்டும், மருந்தைக் குடித்தும் தற்கொலை செய்துகொள்ளும் அவலம், சமீப காலமாக தமிழக காவல்துறையில் அதிகரித்து வருகிறது.
நாட்டில் பொது அமைதியையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர், இப்படி விட்டில் பூச்சிகளை போல தன்னைதானே அழித்து கொல்வது எதனால்? இது எந்த வகையில் நியாயம்?
பணி நிமித்தமாகவோ, உயர் அதிகாரிகளின் மிரட்டல், தொந்தரவு, கெடுபிடி, நெருக்கடி காரணமாகவோ (அல்லது) குடும்ப சூழல், கடன் தொல்லை மற்றும் வெளியில் சொல்ல முடியாத தனிப்பட்ட அந்தரங்க பிரச்சனைக்களுக்காவோ.. இதுபோன்று தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவை மேற்கொள்கின்றனர்.
காவல்துறையில் எவ்வளவுதான் உடல் ரீதியாக வலிமையான பயிற்சி அளித்தாலும், மனதளவில் அவர்கள் பலகீனமான நிலையில்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களும் மனிதர்கள்தானே?!
இதற்கு முக்கிய காரணம், அவர்கள் பணியில் சேர்ந்த காலம் முதல், அவர்கள் ஓய்வு பெறும் நாள்வரை, இரவு, பகல் எந்நேரமும் எதிர்மறையான சம்பவங்களையே பார்க்க வேண்டி இருக்கிறது. பேச வேண்டி இருக்கிறது; பொழுது விடிந்து பொழுது போனால், கீழ் காணும் பிரச்சனைகளையே அவர்கள் தினந்தோறும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
கொலை, கொள்ளை, வெட்டுகாயம் மற்றும் விபத்து, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, ரோந்து பணி, குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கோ, சிறைச்சாலைக்கோ, மருத்துவமனைக்கோ அழைத்து செல்லும் (அல்லது) காவல் காக்கும் பணி, பொது நிகழ்ச்சிகள், மோதல்கள், ஆர்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம்… இதுபோன்ற காரியங்களுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு.. இதற்கிடையில், உயர் அதிகாரிகள் எப்போது அழைத்தாலும், உடனே ஆஜராக வேண்டும். அவர்கள் என்ன வேலை சொன்னாலும், மறுக்காமல் அவர்களுக்கு தொண்டுழியம் செய்ய வேண்டும். இப்படி எப்போதும் பதட்டமான மனநிலையிலேயே வாழ வேண்டிய தர்ம சங்கடமான நிலை காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்குமே இருக்கிறது.
பணி ரீதியாக அவர்கள் சந்திக்கும் தொந்தரவுகளையும், பிரச்சனைகளையும், மன அழுத்தங்களையும் வெளியில் சொல்ல முடியாமல் அவர்கள் விழி பிதுங்கி தவிக்கின்றனர்.
இந்த வேகத்தையும், வேதனைகளையும், சில நேரங்களில், காவல் நிலையத்திற்கு தங்களை தேடி வரும் அப்பாவி மக்கள் மீது காட்டி விடுகிறார்கள். இதனால், காவல்துறை என்றாலே, மக்களுக்கு ஒரு தவறான கருத்து பதிவாக இது காரணமாகிவிடுகிறது.
மேலும், காவல்துறையில் பணியாற்றும் பல பேர் புகை மற்றும் போதை பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அதற்கு அடிமையாகி, தங்கள் சுயத் தன்மையை இழப்பதோடு, தங்கள் கடமையையும் மறந்தவர்களாக ஆகிவிடுகின்றனர். இதில் பல பேர் பணியில் இருக்கும்போதே போதையில் வலம் வருகிறார்கள்.
இன்னும் வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமானால், தமிழகத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் இரவு பத்து மணிக்கு மேல் வெளிப்படையாகவே மது அருந்தும் பழக்கம் உள்ளது. உச்சப்பட்சமாக சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் காவல் நிலையத்திலேயே மது விருந்து நடக்கிறது. இவற்றையெல்லாம் உள்துறை அமைச்சகமும், காவல்துறை உயர் அதிகாரிகளும் உன்னிப்பாகக் கண்காணித்து உடனடியாக தடுக்க வேண்டும்.
புகை மற்றும் போதை பழக்கங்களுக்கு ஆட்பட்ட நபர்கள், அவர்களின் தனிப்பட்ட குடும்ப தேவைகளையோ, குடும்ப உறுப்பினர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளவோ முடியாத மனநிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், காவல் துறையில் பணியாற்றும் நபர்களின் பல குடும்பங்கள் அமைதி, நிம்மதி இழந்து காணப்படுகிறது.
இதற்கு நிரந்த தீர்வு கிடைக்க வேண்டுமானால், காவல்துறையில் பணியாற்றும் அனைவரையும் மனதளவில் வலிமையுள்ளவர்களாக மாற்ற வேண்டும்.
மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்ட நபர்களை முதலில் இனம் காண வேண்டும். புகை மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களின் புள்ளி விபரங்களை திரட்ட வேண்டும். இவர்களுக்கு மனோத்தத்துவ மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆற்றுபடுத்துனர்களை கொண்டு ஆலோசனைகளையும், அவசியம் ஏற்பட்டால் தொடர் சிகிச்சையும் அளிக்க வேண்டும்.
மேலும், கீழ்காணும் மகாகவி பாரதியின் கவிதை வரிகளை காலை மற்றும் மாலை நேரங்களில் சப்தமாக வாசிக்க பழக்க வேண்டும்.
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வாமெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மையற்ற சிந்தையாய் வா வா வா
நோய்களற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வாஇளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசிறக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
விழியினால் விளக்குவாய் வா வா வாவெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா
-என்ற மகாகவி பாரதியின் கருத்துக்களை, தமிழக காவல்துறை நடைமுறையில் மெய்பித்து காட்ட வேண்டும்.
செய்வார்களா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
arpudamana padalvarigal Kaval thurai kanniyamanathu, yar ponaikkumani kattuvadu. Nalla adhigarigal varumpodu indapadalvarigalai merkolkatti pesuvargal adanpiragu ulladu ullapadiye kastapadum kavalthurai paniyalargal appadiye manampulungi savargal indanilai maravendum.