வலங்கைமான் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் திருக்கோவிலில் பாடைக்காவடி திருவிழா!


திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், வரதராஜன் பேட்டை ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் திருக்கோவிலில் “பாடைக்காவடி” திருவிழா இன்று வெகு விமர்சையாக  நடைபெற்றது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 10– ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்று வந்தது. பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்கட்டி திருவிழா இன்று நடைபெற்றது.

வலங்கைமான் வளம் சூழ்ந்த ஊர், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் ஊரின் ஈசான்யா திசையில் ஸ்ரீ சீதளாதேவி மகாமாரியம்மன் அமைந்துள்ளது. ஒரு ஊர் ஈசானிய திசையில் வளர்ந்து இருந்தால் அவ்வூர் சிறப்பாக விளங்கும் என்பது ஐதீகம். அத்திசையில் நீர் நிலையும், கோவிலும் அமைவது அவ்வூருக்கு மேலும் சிறப்பாகும்.

தெய்வத்தன்மை புரிந்த ஈசானிய திசையில் வரதராஜன்பேட்டை என்னும் இடத்தில் கிழக்கு நோக்கி அன்னை ஸ்ரீ சீதளாதேவி குடிகொண்டிருக்கிறார். நெடுஞ்சாலையும் ஈசானிய பாதையாக செல்கிறது. சாலையோரம் அமைந்துள்ள இத்திருக்கோயிலின் தெய்வீக சக்தி நிரம்பி பொங்குவதற்கு ஈசானிய திசையும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்கள் தங்களின் நோய் நீங்க மகா மாரியம்மனுக்கு வேண்டி கொள்வார்கள், பின்னர் நோய் குணமடைந்ததும் இக்கோவிலுக்கு பங்குனி திருவிழாவின் போது நேர்த்திகடனை செலுத்துவார்கள்.  அதன்படி இன்று நோய் நீங்கியவர்களை பச்சை ஓலை படுக்கையுடன், பச்சை மூங்கில் பாடையில் இறந்தவர்களை போல் படுக்க வைத்து, அவர்களின் உறவினர்கள் நான்கு பேர் இறந்தவர்களை எடுத்து செல்வதை போல, தீச்சட்டி ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தார்கள்.

வேறு எங்கும் இதுபோன்ற பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது இல்லை. ஒவ்வொரு திருத்தலத்திற்கும் தனித்ததோர் மகிமை உண்டு. வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலின் மகிமையே பாடைக்காவடி திருவிழாதான். இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.

இன்று வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலை சுற்றி நூற்று கணக்கான பாடைகள். பாடைகளில் பிணங்கள், பிணங்களுக்கு அடிக்கப்படும் மேளம், தீச்சட்டி என ஒரு பகல் நேரத்தில் வீதி முழுக்க பாடைகாவடிகளில் வலம் வந்தனர்.

பாடைகளில் படுத்திருப்போர் வாய்கட்டி உடலில் கயிறு கட்டி பாடைகாவடி எடுக்கும் பக்தர்களை பார்க்கும் போது அன்னையின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை எத்தகையது என்பது புரிந்தாலும், “நாம் எப்படி தான் வாழ்ந்தாலும் கடைசியில் இப்படிதான் போக போகிறோம்” என்ற ஒரு உயர்ந்த தத்துவத்தையும் இந்த பாடைக்காவடி திருவிழா போதிக்கிறது.

-க.மகேஷ்வரன்.

 -ஜி.ரவிச்சந்திரன். 

 

Leave a Reply