கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி முன் கூட்டியே வெளியான விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள கருப்பு ஆடுகளை முதலில் களையெடுக்க வேண்டும்!

பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை நிர்வாகி அமித் மாளவியா.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் மே, 12-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும், மே, 15-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என, இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை நிர்வாகி அமித் மாளவியா சமூக வலை தளத்தில் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை வெளியிட்டதால் இந்திய அரசியலில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிகழ்வு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி முன் கூட்டியே வெளியானதுக் குறித்து விரிவான விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி 6 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.


இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை நிர்வாகி அமித் மாளவியா, இந்நிகழ்வு குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் உண்மை நகல் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம். 

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு “டைம்ஸ் நௌவ் – TIMES NOW” தொலைக்காட்சியில் மார்ச் 27 காலை 11.06 மணிக்கு வெளிவந்ததாகவும், ஆனால், தான் மார்ச் 27 காலை 11.08 மணிக்குதான் டிவிட்டரில் வெளியிட்டதாகவும், ஆக “டைம்ஸ் நௌவ் – TIMES NOW” தொலைக்காட்சியில் வெளிவந்து 2 நிமிடங்களுக்கு பிறகுதான் தான் வெளியிட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கர்நாடக காங்கிரஸ் சமூக ஊடக பொறுப்பாளர் ஸ்ரீ வாட்சா-வும் மார்ச் 27 காலை 11.08 மணிக்கு டிவிட் செய்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சியில் மார்ச் 27 காலை 11.14 மணிக்குதான் வெளியிட்டதாக தெரிகிறது. அப்படியானால், இதில் யார் சொல்வது உண்மை?

பிரச்சனை முற்றியவுடன் “டைம்ஸ் நௌவ் – TIMES NOW” தொலைக்காட்சி உள்பட மேற்கண்ட மூன்று பேருமே தங்கள் பதிவுகளை சமூக ஊடகத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

ஆக இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இவர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்தது யார்? “உள்ளவன் இல்லாமல் ஊர் அழியாது” என்பது கிராமத்து பழமொழி. அப்படியானால், இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி (அல்லது) ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி இத்தகவல் முன்கூட்டியே வெளியில் கசிந்தது? இது போன்று இதுவரை வேறு என்னென்ன தகவல்கள் வெளியானதோ (அல்லது) விற்கப்பட்டதோ? ஆண்டவனுக்குதான் வெளிச்சம். “கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” எனவே, மல்லாந்துப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் இனியும் முயற்சிக்க வேண்டாம். முதலில் விசாரணையை தேர்தல் ஆணையத்தில் இருந்து தொடங்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள கருப்பு ஆடுகளை முதலில் களையெடுக்க வேண்டும். அதுவரை இதுபோன்ற அசிங்கங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply