திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மேல குமரேசபுரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் நாதமணி (வயது 51), இவர் பெல் (BHEL) தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (வயது 48) திருவெறும்பூரில் உள்ள தனியார் பேக்கரி குடோனில் உதவியாளராக வேலைப்பார்த்து வந்தார்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் புடவை, நைட்டி, ஜாக்கெட் பிட் உள்ளிட்ட ஆடைகளைத் தவணை முறையில் விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்துள்ளார்.
கடந்த 26-ந் தேதி சாந்தி வேலைக்கு போய்விட்டு மதியம் வீட்டுக்கு வந்துள்ளார். துணி மணிகள் விற்பனை செய்ததில் வரவேண்டிய தவணை தொகையை வசூலிக்க அன்று மாலை வீட்டை விட்டு போனவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நாதமணி தனது மனைவி சாந்தியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுக்குறித்து 27-ம் தேதி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் நாதமணி புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்த போது, வீட்டை விட்டு வெளியில் போன சாந்தி, அதன் பிறகு வீடு திரும்பி வில்லை என்பது தெரிந்தது.
இந்நிலையில், மேல குமரேசபுரம் பக்கத்து தெருவான கோனார் தெருவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் விசாரணை செய்தப்போது, அந்த பெண் 26-ம் தேதி சாந்தி வந்தார். நான் கூட தவணை தொகை ரூ.100 கொடுக்க வேண்டியிருந்தது, அப்போது சாந்தி அதேப்பகுதியை சேர்ந்த ராமதுரையின் மனைவி பூங்குழலி தரவேண்டிய பணத்தை வாங்கி கொண்டு வந்து, உன்னிடம் வாங்கி கொள்கிறேன் என்று கூறி சாந்தி பூங்குழலி வீட்டுக்கு சென்றதாகவும், அதன் பிறகு தன்னிடம் வந்து பணம் வாங்கவில்லை என்றும், அந்த பெண்மணி கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், திருவெறும்பூர் போலீசார் இன்று காலை சந்தேகத்தின் அடிப்படையில் பூங்குழலியை விசாரணைக்காக அழைத்து சென்று விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பூங்குழலி அந்தப் பகுதியில் உள்ள ஒரு மகளிர் சுயஉதவி குழுவில் உறுப்பினராக உள்ளதாகவும், சாந்திக்கு பூங்குழலி ரூ.2 ஆயிரம் பணம் தரவேண்டி இருந்ததாகவும், அதனை கேட்டு பூங்குழலியை, சாந்தி அடிக்கடி திட்டி வந்ததாகவும், அதேபோல் 26-ம் தேதியும் சாந்தி, பூங்குழலியிடம் பணம் கேட்டுள்ளார். பூங்குழலி, சாந்திக்கு போன் செய்து மாலை 5 மணிக்கு வந்து பணத்தை வாங்கிகொள் என்று கூறி கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சாந்தி, பூங்குழலி வீட்டுக்கு வந்தபோது சாந்திக்கும், பூங்குழலிக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது.
அப்போது வீட்டில் இருந்த சுத்திலை எடுத்து சாந்தி தலையில் பூங்குழலி அடித்துள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே சாந்தி பரிதாபமாக இறந்து விட்டதாகவும், பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள சமையல் செய்யும் பகுதியில் ஏற்கனவே தென்னை மரம் இருந்து வெட்டப்பட்டு அதன் வேர் பறித்த குழியில் சாந்தியை தலைகீலாக சொறுகி மண்ணை போட்டு மூடியதோடு, சாந்தி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் உட்பட அனைத்து நகைகளையும் பூங்குழலில் எடுத்து கொண்டதாகவும், அதில் ஒரு செயினை துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் ரூ.30 ஆயிரத்திற்கு அடகு வைத்தள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் பூங்குழலி வீட்டுக்கு சென்று சாந்தி புதைக்கப்பட்டிருக்கும் இடத்தை பார்வையிட்டதோடு இதுசம்மந்தமாக திருவெறும்பூர் தாசில்தார் ஷோபாவுக்கு தகவல் கொடுத்தனர்.
தாசில்தார் ஷோபா முன்னிலையில், சாந்தியின் உடலை தோண்டி எடுக்க முற்பட்டபோது, சாந்தியின் உடல் தலைகீழாக தென்னை மர குழியில் சொருகப்பட்டிருந்ததால், சாந்தியின் உடல் வேர்களில் மாட்டி கொண்டது. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தோண்டி எடுத்தனர். பின்னர் சாந்தியின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பூங்குழலியிடமிருந்து சாந்தியின் நகைகள் கைப்பற்றப்பட்டன. சாந்தியின் கொலை நகைக்காக நடந்திருக்கலாம்? மேலும், பூங்குழலியோடு வேறு நபர்களும் இந்த கொலையில் சம்மந்தப்பட்டிருக்க கூடும் என்ற அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் இப்படி ஒரு பெண், இன்னொரு பெண்ணை கொலை செய்து புதைத்திருக்கும் சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-ஆர்.சிராசுதீன்.